இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களானவர்களும் தகுதியானவர் என்ற முறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை பின்பற்றப்பட்டு வந்தது. 
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பேற்க சிலர் வழக்குத் தொடர்ந்ததன் காரணமாக அதற்குத் தடையாணை பெறப்பட்டது. இதனால் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தடைபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் விதித்திருந்த தடை யை நீக்கியது. இதனால் பதவி உயர்வுக்கான பணிகளைக் கல்வித்துறை தொடங்கியது. இதற்கு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. அதனால், பதவி உயர்வு பிரச்னை மீண்டும் உயர் நீதிமன்றம் சென்றது. பள்ளிக்கல்வி இயக்குநரகம் தயாரித்த பட்டியலுக்கு, நீதிமன்றம் தடை விதித்தது. அதனால், பதவி உயர்வு நடவடிக்கை மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டாவது முறையாகவும் தடையாணை நீக்கப்பட்டது. அதனால், 1,200 அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களைப் பதவி உயர்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
ஒத்துழைப்புக் கிடைப்பதில் சிக்கல்... இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.நடராஜன் கூறியது:
தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பள்ளிகளில் நிர்வாகப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பில் இருக்கும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதனால் அவர்களுக்குரிய பாட வகுப்புகளுக்குச் சரியாகச் செல்ல முடிவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தலைமை ஆசிரியர் பொறுப்பை மட்டுமே வகிப்பதால் நிர்வாகப் பணிகளில் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. 
அரசிடம் கோரிக்கை: மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும் உடனடியாகச் சென்றடையவும், பள்ளி நிர்வாகம் தொய்வின்றி நடைபெறுவதற்கும் காலியாக இருக்கும் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையிலேயே 1,200-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களைப் பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போதைய சூழலில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு வழக்கு முடிவடைந்ததும் மற்றொரு பிரிவினர் இன்னொரு வழக்கை தொடுத்தனர். இதனால் தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. விரைவில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் நிர்வாகப் பணிகள் சீராக நடைபெறும் வகையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com