தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தால் பாராட்டு: முதல்வர்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் 8 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது,
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தால் பாராட்டு: முதல்வர்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் 8 பேர் அதிமுகவில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது, ஆனால், அமைச்சர் பதவி கொடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற, காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். தமிழகத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவுக்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால் கர்நாடகம் மட்டும் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைத்து விரைவில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். பிரதமர் மோடியிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 
தினகரன் கட்சியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் தங்க தமிழச்செல்வன் உள்ளிட்ட 8 பேர் அதிமுகவில் மீண்டும் இணைய உள்ளதாக நீங்கள் (செய்தியாளர்கள்) தான் கூறுகிறீர்கள். அப்படி வந்து, இணைந்தால் பாராட்டுக்குரியது. ஆனால் அமைச்சர் பதவி என்பதற்கு சட்டரீதியாக இடமில்லை. இடைத்தேர்தலைக் கொண்டு வருவதற்காகத்தான் தினகரன் அணியினர் திட்டமிட்டு வருவதாக நீங்கள் (செய்தியாளர்கள்) தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள போது, இடைத்தேர்தல் எப்படி வரும்? என்றார் அவர்.
முன்னதாக விமான நிலையத்தில் முதல்வருக்கு, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, விமான நிலைய இயக்குநர் கே,. குணசேகரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ப. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, ஓ.எஸ். மணியன், காமராஜ், முன்னாள் அமைச்சர்கள் மு. பரஞ்சோதி, என்.ஆர். சிவபதி, கே.கே.பாலசுப்பிரமணியன், டி.பி. பூனாட்சி உள்ளிட்டோர் வரவேற்றனர்.


மேட்டூர் அணை நிரம்பியதும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
 தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
மேட்டூர் அணை நிரம்பியதும் டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் நிச்சயமாகத் திறக்கப்படும். இப்போது, அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு நீர் வந்தவுடன், பாசனத்துக்குத் தேவையான நீர் திறந்துவிடப்படும்.முன்னதாக, மயிலாடுதுறைக்குச் செல்லும் வழியில் புதுக்குடியில் அவருக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com