மக்கள் நீதி மய்யத்துக்கு விரைவில் கட்சி அங்கீகாரம் கிடைக்கும்: தில்லியில் கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யத்துக்கு மிக விரைவில் கட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்துக்கு விரைவில் கட்சி அங்கீகாரம் கிடைக்கும்: தில்லியில் கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யத்துக்கு மிக விரைவில் கட்சி அங்கீகாரம் கிடைக்கும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்காக தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். 
அவர் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் குறித்து ஆட்சேபம் ஏதும் இருப்பின் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், அவரது கட்சியின் பெயர் குறித்து எந்தவித ஆட்சேபமும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. 
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் புதன்கிழமை தில்லி வந்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அவர் மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
இது ஒரு சாதாரண சந்திப்புதான். தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், கட்சி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கான பதில்களைக் கூறினேன். எங்கள் கட்சியின் பெயர் குறித்து எதிர்ப்பு ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. மக்கள் நீதி மய்யத்துக்கு கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்சியின் சின்னம் தொடர்பாக கோரிக்கை ஏதும் வைக்கவில்லை. எங்களுக்குள் பேசி முடிவெடுத்த பிறகு அது தொடர்பாகக் கேட்போம்.
சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக கேள்வி கேட்கிறீர்கள். தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்துப் பேசினாலே குற்றம் என்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த ஆதங்கமும், கவலையும் எல்லா குடிமக்களுக்கும் இருக்கும்; எனக்கும் உள்ளது என்றார் கமல்ஹாசன்.
ராகுலுடன் ஆலோசனை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினார். மாலை 4 மணிக்கு தொடங்கிய சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. 
இச்சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ராகுல் காந்தியை பெங்களூருவில் சந்தித்தபோது, தில்லி வந்தால் சந்திக்கிறேன் எனக் கூறியிருந்தேன். அதன்படி, தில்லியில் புதன்கிழமை அவரைச் சந்தித்துள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். ஆனால், இரண்டு அரசியல்வாதிகள் சந்தித்துக் கொண்டால் அரசியல் பேசுவது வழக்கம்தான். அதேபோல ராகுல் காந்தியும் நானும் அரசியல் பேசினோம். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பேசினோம். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஏதும் பேசவில்லை. கேஜரிவாலின் தர்னா நல்லவிதமாக முடிவடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி' என்றார். 
இதற்கிடையே, கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரையில், தில்லியில் கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் தொடர்புடைய பரந்துபட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பேசினோம்' என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், ராகுல்காந்தியின் சுட்டுரையை சுட்டிக்காட்டி கமல்ஹாசன் தனது சுட்டுரையில், நன்றி ராகுல் காந்தி ஜி. நீங்கள் நேரம் ஒதுக்கியதற்கும், தகவல்களுக்கும் நன்றி. நமது கலந்துரையாடல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com