மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம்
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சீனிவாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் தொடர்பாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அப்பல்கலை. துணைவேந்தர் செல்லதுரை உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத செல்லதுரையை விதிகளுக்குப் புறம்பாக மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தராக நியமித்திருப்பது சட்ட விரோதமானது. இது பல்கலை. விதிகளுக்கு முரணானது. பல்கலை. காலிப் பணியிடங்களை துணைவேந்தர் செல்லதுரை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்வதுடன், புதிதாக எந்தவொரு பணியிடங்களையும் நிரப்பத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 14-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்கிறோம். அவர் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்குள்பட்டு துணைவேந்தராக தேர்வு செய்யப்படவில்லை. எனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் ஆளுநரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். இக்குழு 3 மாத காலத்துக்குள் புதிய துணை வேந்தரை சட்டத்துக்குள்பட்டு பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை செல்லதுரை மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதை சட்டத்துக்குள்பட்டுதான் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேல்முறையீடு: இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பி.பி. செல்லதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.பி. செல்லதுரை சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, தமிழக ஆளுநர் 45 நிமிடம் நேர்காணல் நடத்தியே பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமிக்கபட்டுள்ளார். எனவே, மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பி.பி.செல்லதுரை நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்றார்.
எதிர் மனுதாரர் லயோனல் அந்தோணிராஜ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ். வாஞ்சிநாதன், பி.பி. செல்லதுரைக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வெங்கடரமணி ஆஜராகினார். அவர்களது வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தடை கோரிய மனு தொடர்பாக (எதிர் மனுதாரர்களுக்கு) நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 3-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com