மதுரையில் எய்ம்ஸ்: 3 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் 3 ஆண்டு கால தொடர் போராட்டத்தின் விளைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் அருகே செல்லும் சாலை.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் அருகே செல்லும் சாலை.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் 3 ஆண்டு கால தொடர் போராட்டத்தின் விளைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்கு தென் மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு 2014-இல் அறிவித்தது. தமிழக அரசின் சார்பில் தேர்வு செய்து கொடுக்கப்பட்ட 5 இடங்களையும் மத்திய குழுவினர் 2015-இல் ஆய்வு செய்தனர்.
தோப்பூரில் ஆய்வு: திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் 200 ஏக்கர் நிலத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைந்தால் தென் மாவட்டங்கள் உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி பேர் பயன்அடைவார்கள் என்று விளக்கிக் கூறப்பட்டது. ஆய்வுக்குப் பின்னர் தில்லியில் நடைபெற்ற உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் மருத்துவமனை எங்கு அமையும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வில்லை.
மக்கள் கூட்டமைப்பு உருவாக்கம்: மதுரையைச் சேர்ந்த வர்த்தக அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம், சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு வகையிலான தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 
சட்டப் போராட்டம்: மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு அறிவிக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பின்பு 2017 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும் இடத்தை அறிவிக்காததால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவதற்காக அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 இடங்களிலும் மீண்டும் ஆய்வு நடத்த துணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், குழுவினர் ஆய்வு செய்து இடத்தை அறிவிக்க 3 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
அந்த காலக்கெடுவும் முடிவடைய உள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை இயக்குநர் சஞ்சய் ராய், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 14-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 5 இடங்களில் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாக ஜூன் 18-ஆம் தேதி விவாதித்து முடிவெடுக்க இருப்பதாகவும், அதன்பின்னர் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
மகிழ்ச்சியில் மக்கள்: இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறியது: நீண்ட போராட்டத்தின் விளைவுதான் இந்த வெற்றி. கேரளம், அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த தமிழர்களும் இதனால் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மத்தியப் பகுதியான மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும், ஈரோடு, கரூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் இருந்தும் 3 மணி நேரத்தில் மதுரையை அடைந்து விடலாம். 
எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் மதுரைக்கு மருத்துவச் சுற்றுலா அதைச் சார்ந்த போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள் அதிகரிக்கும். மேலும் மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என ரூ.5,000 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகள் வரும். இதனால் நேரடி மற்றும் மறைமுகமாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com