கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்காக தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவர் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் குறித்து ஆட்சேபம் ஏதும் இருப்பின் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், அவரது கட்சியின் பெயர் குறித்து எந்தவித ஆட்சேபமும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் புதன்கிழமை தில்லி வந்தார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அவர் மனு அளித்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:


இது ஒரு சாதாரண சந்திப்புதான். தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், கட்சி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கான பதில்களைக் கூறினேன். எங்கள் கட்சியின் பெயர் குறித்து எதிர்ப்பு ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. மக்கள் நீதி மய்யத்துக்கு கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்சியின் சின்னம் தொடர்பாக கோரிக்கை ஏதும் வைக்கவில்லை. எங்களுக்குள் பேசி முடிவெடுத்த பிறகு அது தொடர்பாகக் கேட்போம்" என்றார். 

இந்நிலையில் தேர்தல் ஆணையம், மக்கள் நீதி மய்யத்துக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com