சாகுபடி தொடர்ந்து பொய்த்துப்போனதால் வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள்!

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் தொடர்ந்து 7 -ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
சாகுபடி தொடர்ந்து பொய்த்துப்போனதால் வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள்!

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் தொடர்ந்து 7 -ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். இதனால், வேலையின்றித் தவிக்கும் நிலைக்கு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயம். அதிலும் நெல் உற்பத்திதான் பிரதானம். டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மாவட்டமாகவும் திருவாரூர் விளங்குகிறது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் கிராமப்புறங்களில் உள்ளனர். ஆற்றுத்தண்ணீரை நம்பி சாகுபடி செய்ய மனரீதியாக பழக்கப்பட்ட விவசாயிகள், குறிப்பாக ஆடி மாதத்தில் கோட்டையில் நெல்லை பாதுகாத்து, ஆவணி மாதத்தில் விதை விடுவது, நாற்று நடுவது என்றும், ஐப்பசி மாதத்தில் களை எடுத்து, தை மாதத்தில் அறுவடைப் பணிகளை நிறைவேற்றி, பங்குனி, சித்திரை மாதங்களில் உளுந்து, பயறு என ஆண்டு முழுவதும் விவசாயத்தை நம்பி, தொழிலாக செய்து வருகின்றனர்.
கடந்த 2013 -ஆம் ஆண்டிலிருந்து நிகழாண்டு வரை ஆற்றுத்தண்ணீர் என்பதே பெருமளவு சாகுபடிக்கு இல்லாமல் போய்விட்டது. திடீரென அபரிமிதமான மழை அல்லது மழை இல்லாமல் பொய்த்துப்போவது என சாகுபடி செய்ய ஏதுவான நிலை விவசாயிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அமையவில்லை. இதனால், குறுவை சாகுபடி என்பது முற்றிலும் முடிந்த கதையாகிவிட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம் (ஒரு பகுதி), வலங்கைமான்(ஒருபகுதி), திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட பகுதியென விவசாயம் நிலத்தடி தண்ணீரால் சாகுபடி செய்ய முடிகிறது. அதிலும் மின்சார பிரச்னைவேறு.
முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடியில் ஒருபகுதி, திருவாரூரில் பல பகுதிகளில் முற்றிலும் நிலத்தடி தண்ணீரைக் கொண்டு சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளது.
மழை பொய்த்துப்போனது, வறட்சி என பல பிரச்னைகளால் சாகுபடி என்பது முற்றிலும் நின்றுபோய்விட்டது. ஆறு, வாய்க்கால்களில் மராமத்துப் பணிகள் நின்றுவிட்டதால் மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரும் கடைமடைக்கு செல்வதில்லை.
கடந்த 7 ஆண்டுகளாக சாகுபடி செய்ய இயலாத நிலையில், விதை நெல்லை சேமிக்கும் பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. இப்படி தொடர்ந்து டெல்டா விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய இயலாத நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டும், தண்ணீர் வந்து சேருமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயியும், திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான ஜி. சுந்தரமூர்த்தி கூறியது :
மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஆனால், அவர்கள் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். விவசாயிகள் விளைநிலங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டால், மத்திய அரசு மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறது.
ஓராண்டுக்கு ஏறக்குறைய 10 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 3 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்வதற்கே அரசு திணறுகிறது.
விளைநிலங்கள் தரிசாக கிடக்கின்றன. காவிரி டெல்டாவில் மட்டும் சிறு, குறு விவசாயிகள் 1.70 லட்சம் பேர் உள்ளனர். இதுதவிர, விவசாயத்தைச் சார்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு இன்று வேலையில்லாத நிலை உள்ளது. நெல் சாகுபடி மட்டுமே இம்மாவட்டத்துக்கு ஏற்ற சாகுபடி.
ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக நெல் சாகுபடி குறைந்து நெல் உற்பத்தியே இல்லாத நிலைக்கு டெல்டா பகுதி சென்றுவிட்டது. இவற்றை காப்பாற்ற தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க போராட முன்வர வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com