யோகா பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டி

யோகா பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற யோகா பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற யோகா பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

யோகா பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

தினமணி நாளிதழ் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கான யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்தார். சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்புரையில் பேசியது: தினமணி நாளிதழின் தீவிர வாசகன் நான். தினமணியின் தாக்கத்தால் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழில் பேசுவதற்கு முயன்று வருகிறேன். தினமணி சார்பில் மாணவர்களுக்கான யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது பாராட்டுக்குரியது.
வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றி மிக முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி அடைய உடல் வலிமை, மன ஒருமைப்பாடு, வாழ்வியல் ஒழுக்கம் ஆகிய மூன்றும் மிக முக்கியம். இந்த மூன்று குணங்களும் உள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவர் என்பது உறுதி. உடல் வலிமை, மன ஒருமைப்பாடு, வாழ்வியல் ஒழுக்கம் ஆகிய மூன்றையும் யோகப் பயிற்சியால் மட்டுமே பெற முடியும்.
யோகா பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டி. எனவே, மாணவர்கள் யோகப் பயிற்சியை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். கடந்த ஓராண்டாக நானும் யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
மனம் சார்ந்தது: விழாவுக்குத் தலைமை வகித்து தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:
தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகள் இருக்கலாம். ஆனால், மகாகவி பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியது சேதுபதி மேல்நிலைப் பள்ளி. மகாகவி பாரதியின் மூச்சுக் காற்று உலவுகின்ற இடம் இது. இப் பள்ளியில் படித்து வெளியேறும் மாணவர்கள், சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாரதி கூறுவதைப் போல, சக்தி உடையவர்களாக மாற்றப்படுகின்றனர். நான்காம் தமிழ்ச் சங்கம் இந்தப் பள்ளி வளாகத்தில்தான் கூடியது. தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள இப் பள்ளியில் யோகா தின விழா நடைபெறுவது சிறப்புக்குரியது.
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய பெருமைக்கு இந்தியாவின் பாரம்பரிய செழுமையே காரணம். வலுவான இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யோகக் கலையை நமக்கு அளித்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர் கூறியதைப் போல, ஆரோக்கியமான இளைஞர் சமூகம் இருந்தால்தான் வலிமையான பாரதம் என்ற கனவு நனவாகும். மனிதப் பிறவி என்பது கிடைப்பதற்கரியது. அந்தப் பிறவியின் பயனை உலகம் பெற வேண்டும் என்பதை மாணவர்கள் மனதில் நிறுத்திக் கொண்டு உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்த வேண்டும்.
உடலை வலுவாக இருக்கச் செய்வதே யோகாவின் அடிப்படை நோக்கம். உடல் நன்றாக இருக்க வேண்டுமானால், மனித உடலின் முக்கிய உறுப்பான நுரையீரல் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். மூச்சுப் பயிற்சியின் அடிப்படை யோகா என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது, உடல் சார்ந்தது. உடலையும் மனதையும் வலுப்படுத்த, நினைவாற்றலை மேம்படுத்த, யோகாசனம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை நமது முன்னோர்கள் கொடுத்திருக்கின்றனர் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர். சேதுபதி பள்ளி, மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, தியாகராஜர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, அல் அமீன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் தேசிய மாணவர் படை மாணவர்கள் பல்வேறு ஆசனங்களில் ஈடுபட்டனர். பயிற்சியாளர் வி.ஆர். கணேஷ்சந்தர் யோகாசன செயல்விளக்கம் அளித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும மதுரை கிளை மேலாளர் நா.ரகு சுப்பிரமணியன், சேதுபதி பள்ளித் தலைமை ஆசிரியர் சி.கோபாலகிருஷ்ணன், தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி எம்.எஸ். தியோபா, மருத்துவப் பிரிவு அதிகாரி வி. ரகோத்தமன், பள்ளிகளின் தேசிய மாணவர் படை அலுவலர்கள் எஸ். பாலாஜி, கே.மணிகண்டன், ஆர்.சிவா, ஜே.மனுவேல் கிறிஸ்டோபர், சங்கர குற்றாலம், எப்.அலெக்ஸ், ஜெலானி, ஆடிட்டர் எச். ஆதிசேஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com