சென்னை - சேலம் 8வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி? செயல்திட்ட அறிக்கையின் சொதப்பல்கள்

ஏற்கனவே சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு ஏராளமான எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து வெளியிடப்பட்ட செயல் திட்ட அறிக்கையில் காணப்படும் குளறுபடிகள் தலைச்சுற்ற வைக்கின்றன.
சென்னை - சேலம் 8வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி? செயல்திட்ட அறிக்கையின் சொதப்பல்கள்


சென்னை: ஏற்கனவே சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு ஏராளமான எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், அது குறித்து வெளியிடப்பட்ட செயல் திட்ட அறிக்கையில் காணப்படும் குளறுபடிகள் தலைச்சுற்ற வைக்கின்றன.

அதாவது, சென்னை - சேலம் திட்ட அறிக்கையில் 11வது தலைப்பு பாலினம் மற்றும் மேம்பாடு. இதில் 11.7வது தகவல் முழுக்க முழுக்க காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சீனாவில் போடப்பட்ட சாலை செயல் திட்ட அறிக்கையில் இருந்து.

இந்த சாலைத் திட்டத்துக்கும் பாலின மேம்பாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற நீங்கள் கேட்கலாம். இருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

அதாவது, 11.7 கூறுவது என்னவென்றால், சென்னை - சேலம் திட்டம் கொண்டு வரப்பட்டால், புறநகர் சாலைத் தொடர்பும், பொதுப் போக்குவரத்தும் மேம்படும். இதன் மூலம், பெண்களும், ஆண்களும் சரிசமமாக பயனடைவார்கள். ஏற்கனவே ஜியான் (சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நகரம் ஜியான்) நகரில் பெண் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, இந்த சாலை திட்டத்தால் தரமான போக்குவரத்தும், அதிக போக்குவரத்து வசதியும் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துக் கேட்க நமது எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் ஃபீட்பேக் இன்ப்ரா பிரைவேட் லிமிடட் நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை.

இதன் மூலம் சென்னை - சேலம் 8வழிச் சாலைத் திட்டத்தால் ஏற்படும் சமூக மாற்றம் குறித்து எந்த அளவுக்கு உண்மையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்.

சென்னை - சேலம் செயல் திட்ட  அறிக்கையில் காணப்படும் இந்த சொதப்பல்கள் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால், அறிக்கையை தயாரித்த ஃபீட்பேக் இன்ப்ரா பிரைவேட் லிமிடட் நிறுவனம், சீனாவில் போடப்பட்ட சாலைத் திட்ட அறிக்கையில் இருந்து தகவல்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறது என்பதைத்தான்.

ஒரு போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு, அதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலைகள் துறை வலியுறுத்துகிறது. (அதற்காக இப்படியா?)

இது மட்டுமல்ல, இந்த திட்டம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வு குறித்து கூறப்பட்டிருப்பது குறித்து சுற்றுச்சூழல் துறை ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில், 8 வழிச் சாலைத் திட்டம் குறித்து தனி நபர் மற்றும் அமைப்பு ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்துக் கணிப்பின் போது, எய்ட்ஸ் நோய் பற்றி டிரக் ஓட்டுனர்கள், உள்ளூர் மக்கள் போன்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அது தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டது குறித்துத்தான் செயல் திட்ட அறிக்கையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோய்க்கும், 8 வழிச் சாலை திட்டத்தால் தங்களது வாழ்வாதாரங்களை இழக்கும் விவசாயிகளுக்கும் என்ன சம்பந்தம். (சீனா செயல் திட்ட  அறிக்கையை தயாரித்தவர்களைத்தான் கேட்க வேண்டுமோ?)

மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் குறித்த செயல் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, திட்ட அறிக்கையினைத் தயாரிக்கும் போது அதன் பக்கங்களை அதிகமாகக் காட்டவும், (பொதுத் தேர்வில் விடை தெரியாத மாணவர்கள் செய்யும் டிரிக்ஸ் அல்லவா இது?) இந்த திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத சில தகவல்களையும் செயல் திட்ட அறிக்கை தயாரிப்பாளர்கள் சேர்த்துள்ளனர் என்பதே இதன் மூலம் நன்கு விளங்குகிறது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com