மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து...!தமிழக - கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் அவதிப்படும் போலீஸார்

தமிழக - கேரள எல்லை சோதனைச் சாவடிகளுக்கு உரிய கட்டடம், வசதிகள் இல்லாததால், இப்பணிகளில் ஈடுபடும், தமிழக காவல் மற்றும் வனத்துறையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டில் சோதனைச் சாவடிக்கு உரிய வசதிகள் இல்லாததால், மழையில் நனைந்தவாறே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தமிழக போலீஸார்.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டில் சோதனைச் சாவடிக்கு உரிய வசதிகள் இல்லாததால், மழையில் நனைந்தவாறே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தமிழக போலீஸார்.

தமிழக - கேரள எல்லை சோதனைச் சாவடிகளுக்கு உரிய கட்டடம், வசதிகள் இல்லாததால், இப்பணிகளில் ஈடுபடும், தமிழக காவல் மற்றும் வனத்துறையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலிருந்து தமிழக - கேரள மாநிலங்களுக்கு செல்ல கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய மூன்று மலைச்சாலைகள் உள்ளன. இதன் வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் விவசாய வேலைகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக, பேருந்து, வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இதற்காக, தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இரண்டு மாநிலங்களின் காவல்துறை, வனத்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கேரள மாநில அரசு சோதனைச் சாவடிக்கு தேவையான முறையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அடிப்படை வசதிகளை அமைத்துள்ளது.
அதே நேரத்தில் தமிழக பகுதியிலோ பரிதாபமான நிலை உள்ளது. குமுளியில், பாதுகாப்பின்றி மலைச்சாலை ஓரத்தில் கட்டடம் உள்ளது. அதில் பாதுகாப்பின்றி காவலர்கள், வனத்துறையினர் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் இந்த வசதி கூட செய்து தரப்படவில்லை. வனத்துறையினர் அமர்ந்துள்ள இடம் பாழடைந்து இடிந்த நிலையில், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது.
காவல்துறையினருக்கோ, தற்காலிக தகர கூண்டு அமைத்து, அதில் இருவருக்கு மேல் அமர முடியாத இடமாக உள்ளது. தற்போது, பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சோதனை பணிகளில் ஈடுபடமுடியவில்லை, வெயில் காலத்திலோ கூண்டு வெப்பமடைவதால் உள்ளே உட்கார முடியாது. இதனால், கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது. சோதனை பணிகளில் சரிவர ஈடுபட முடியாத நிலை' ஏற்படுகிறது என்கின்றனர் காவலர்கள்.
வனத்துறையினர் கூறும்போது, 24 மணி நேரம் பணியில் உள்ளதால் தங்கும் கட்டடங்கள், மிகவும் சேதமடைந்துள்ளன. அருகே உள்ள குடியிருப்பு கட்டடங்கள் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளன. இதனால் தங்குவதற்கு இடமின்றி வாகனச் சோதனை பணிகளில் தொய்வு ஏற்படுகிறது' என்றனர்.
தமிழக -கேரள எல்லை பகுதியில் சோதனைச்சாவடி பணிகளில் ஈடுபடும் காவல் மற்றும் வனத்துறையினர் எவ்வளவு கவனமாக பணியில் இருந்தாலும், சமூக விரோதிகள் இவர்களின் கண்ணுக்குப் படாமல் செல்வதும், கேரள போலீஸாரிடம் சிக்கி கொள்வதால், தமிழக காவல் மற்றும் வனத்துறையினர் விமர்சனத்துக்குள்ளாவதும் வழக்கமாகி வருகிறது. இந்த நிலையை மாற்ற தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல், வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு
ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஒருவர் கூறியது:
தமிழக - கேரள வன எல்லை பகுதியில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை மீட்டாலே, போதுமான இடவசதி கிடைக்கும். எனவே தேனி மாவட்ட நிர்வாகம் மீண்டும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதியை சர்வே செய்து, தமிழக எல்லை பகுதியை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com