ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தற்போதைய அரசாணையே போதுமானது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தற்போது உள்ள அரசாணையே போதுமானது. இனி எப்போதும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்ற
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தற்போதைய அரசாணையே போதுமானது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தற்போது உள்ள அரசாணையே போதுமானது. இனி எப்போதும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை உறுதியளித்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது மே 22, 23 ஆகிய தேதிகளில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், அதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் இந்த ஆலையின் இரண்டாவது யூனிட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான எவ்வித நிரந்தர உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்கவில்லை. இதனால் ஆலை நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்து ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது என்றனர்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவாக அறிவிக்க தமிழக அரசு முன்வரலாமே என்றனர். இதற்குப் பதிலளித்து அரசு தலைமை வழக்குரைஞர் வாதிடுகையில், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையானது அரசின் கொள்கை முடிவுக்கு சமமானது. தமிழக அரசின் உயர்மட்ட அளவில் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுதான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
ஆலையில் உள்ள அமிலக் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை முதன்மையாகக் கொண்டு இந்தக் குழு முடிவுகளை எடுக்கும். துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. எனவே அதுதொடர்பாக பதிலளிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டு, துப்பாக்கிச்சூடு தொடர்பான மற்ற வழக்குகள் மீதான விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com