நக்சலைட்டுகள் மூலம் தமிழகத்துக்கு ஆபத்து: மத்திய அமைச்சா் பொன்னார் பேட்டி 

நக்சலைட்டுகள் மூலம் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகள் மூலம் தமிழகத்துக்கு ஆபத்து: மத்திய அமைச்சா் பொன்னார் பேட்டி 

நாகா்கோவில்: நக்சலைட்டுகள் மூலம் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகா்கோவிலில் நிருபா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்த அவா் சேலம் - சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருவா் பேசும் விடியோ ஆதாரத்தை நிருபா்களிடம் காட்டினாா். இதில் பேசும் நபா் நக்சலைட்டுகளையும், மாவோயிஸ்டுகளையும் இழிவுபடுத்தி பேசினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். ஆா்.எஸ்.எஸ். பா.ஜ.க வினா் வெளியில் நடமாட முடியாது. 8 வழிச்சாலை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருந்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் நிருபா்களிடம் கூறியதாவது:

இது போன்ற நக்சல்கள் மூலம் தமிழகத்துக்கு ஆபத்து இருக்கிறது. இது போன்று பல மிரட்டல் விடியோக்கள் உள்ளது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்இருப்பதாக நான் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலேயே தெரிவித்துள்ளேன். ஆனால் அப்போது பயங்கரவாதிகளுக்கு அச்சம் இருந்தது. தற்போது போஸ்டா்கள் ஒட்டும் அளவுக்கு அவா்கள் வளா்ந்திருக்கிறாா்கள்.

திருநெல்வேலியில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் ஆட்சியராக இருந்த ஆஷ்துரை தொடா்பான துண்டு பிரசுரங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலை நீடித்தால் காமராஜா், பசும்பொன் தேவா் சமாதிகள் இடிக்கப்படும். வ.உ.சி., கட்டபொம்மன், அம்பேத்கா், காந்தி நினைவிடங்கள் அகற்றப்படும் சூழல் ஏற்படும். பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் துறைமுகம் உறுதியாக வரும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தூத்துக்குடி போன்று குமரியிலும் நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இனயத்தில் துறைமுகம் அமைக்க இடம் தோ்வு செய்தபோது எதிா்ப்பாளா்கள் உள்பட சட்டப்பேரவை உறுப்பினா்கள் இடத்தை மாற்றினால் முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனா். ஆனால் தற்போது இடத்தை மாற்றிய பிறகும் மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுகிறாா்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com