எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: 3-ஆவது நீதிபதி மாற்றம் 

டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 17 பேரின் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியாக சத்தியநாராயணன் பெயரை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: 3-ஆவது நீதிபதி மாற்றம் 

17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் தாமாக 3-ஆவது நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,

  • இந்த வழக்கில் மேலும் சர்ச்சை ஏற்படாமல் இருப்பதற்காக 3-ஆவது நீதிபதியாக விமலாவுக்கு பதில் சத்தியநாராயணன் பெயரை பரிந்துரை செய்கிறோம். 
  • இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும். 
  • இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக இருக்கும். 
  • உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற டிடிவி ஆதரவாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு.
  • 3-ஆவது நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை தகுதி நீக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரும்ப பெறவேண்டும்
  • எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியானது அல்ல. 
  • நீதிபதி மீது இதுபோன்று குற்றச்சாட்டுகளை சுமத்தி மனு தாக்கல் செய்யக்கூடாது. 

வழக்கு விபரம்:

டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தங்க தமிழ்செல்வன் தவிர்த்து மற்ற 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், கடந்த 10 மாதங்களாக 18 தொகுதிகள் காலியாக உள்ளன. இதனால், மக்கள் பணி, வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பின்னர் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. எனவே, தற்போது 3-ஆவது நீதிபதி விசாரித்து தீர்ப்பை வழங்க மேலும் கால தாமதம் ஏற்படும். 

அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறைக் கால அமர்வு முன் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பில் வழக்குரைஞர் விகாஸ் சிங் திங்கள்கிழமை ஆஜராகி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு புதன்கிழமை (ஜூன் 27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com