பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: 5 நாளில் 1.29 லட்சம் பேர் பதிவு

செல்லிடப்பேசி எண் மாறாமல், சேவையை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி கடந்த 5 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 790 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு பதிவு செய்துள்ளனர்
பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: 5 நாளில் 1.29 லட்சம் பேர் பதிவு

செல்லிடப்பேசி எண் மாறாமல், சேவையை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி கடந்த 5 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 790 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு பதிவு செய்துள்ளனர் என்று அதன் தமிழக வட்டத் தலைமை பொது மேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோணி லியோ தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் தமிழக வட்டத்தின் தலைமையகத்தில் இதுதொடர்பாக மார்ஷல் அந்தோணி லியோ நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

செல்லிடப்பேசி எண்ணை மாறாமல், சேவையை மட்டும் வேறு நிறுவனத்துடன் மாற்றிக் கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் சேவையை தமிழகத்தில் பெறுவதற்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 742 செல்லிடப்பேசி பயன்பாட்டாளர்கள் பிற தொலைத்தொடர்பு சேவைகளில் இருந்து பிஎஸ்என்எல்லுக்கு வந்துள்ளனர்.

அத்துடன் சராசரியாக மாதம்தோறும் 1.50 லட்சம் பேர் பிஎஸ்என்எல் சேவையில் புதிதாக இணைகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் திடீரென 3 லட்சத்து 6 ஆயிரத்து 282 பேர் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்துள்ளனர்.

அத்துடன் கடந்த பிப்ரவரி மாதத்தில் 'மொபைல் எண் போர்ட்டபிலிட்டி' மூலம் ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வந்த 57 ஆயிரத்து 345 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். அத்துடன் பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 662 பேர் பிஎஸ்என்எல் சேவையை புதிதாக பெற பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 1 முதல் 5-ஆம் தேதி வரையிலான கடந்த 5 நாள்களில் மட்டும் ஏர்செல் சேவையில் இருந்து பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவதற்காக 1 லட்சத்து 28 ஆயிரத்து 790 பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

பிஎஸ்என்எல் ஒய்ஃபை வசதி: தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சில்லறை மற்றும் மொத்த பயனாளர் திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் ஒய்ஃபை சேவை வழங்கி வருகிறது.

4ஜி சேவை: நோக்கியாவுடன் இணைந்து பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 10 வட்டங்களில் தொடங்க உள்ளது. இதில், தெற்கு மண்டலங்களில் தமிழக வட்டமும் இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஆந்திரம் , கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய வட்டங்களிலும் இச்சேவை தொடங்கப்பட உள்ளது. பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்புச் சலுகை திட்டங்கள் பலவற்றையும் அளித்து வருகிறது என்றார் அவர்.

முதன்மை பொது மேலாளர்கள் ஜி.ரவி (நிதி) , பி.சந்தோசம் (நெட் ஒர்க்), அதிகாரிகள் டி.பூங்கொடி, பி.வி.கருணாநிதி, பொது மேலாளர் டி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com