ஹெச்.ராஜாவின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருக்கலாம்: கமல் பேட்டி! 

பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜாவின் நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருக்கலாம்: கமல் பேட்டி! 

சென்னை: பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சி திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவினர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலையை அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தனது முகநூல் பதிவில், ‘லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். 

இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். எச்.ராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்நிலையில் பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் புதனன்று கட்சியின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

பெரியார் சிலையை உடைப்பது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஹெச்.ராஜா பின்னர் அதனை நீக்கியுள்ளார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜாவின் வருத்தத்தினை ஏற்க முடியாது. அவர் ஏன் இவ்வாறு கலக வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பதனைக் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கான நேரம் குறைந்து வருகிறது. அதில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது என நினைக்கிறேன்.

தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை. பொதுமக்களே அதனை பார்த்துக் கொள்வார்கள். பெரியார் சிலையை யாராலும் தொட முடியாது. இவர்கள் அளவுக்கு இல்லாமல் பெரியாரின் உயரம் மிகப் பெரியது. ராஜா விட்ட இந்த அம்பினைத் திரும்பப் பெற இயலாது. 

அப்பொழுது பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின்  தூண்டுதல் இருப்பதாக கருதுகிறீர்களா என்ற செய்தியாளரின்  கேள்விக்கு, கமல் ஆமாம் என்று தெரிவித்தார்.

அது போல கடற்கரை ஓரத்தில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியிருப்பதாக கமல் உள்ளிட்டோருக்கு  நோட்டீஸ்  அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் அரசின் நெருக்கடி இருப்பதாக நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'அது நியாயமான நெருக்கடியா என்று பார்க்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் சட்டத்தினை நம்புகிறேன். அங்கு எழுநூறு பேருக்கு மேல் வீடு கட்டியுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நெருக்கடியோ அதுதான் எனக்கும். சட்டப்படி  தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தில் எதிர் கொள்வேன்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com