ஆன்லைன் பத்திரப்பதிவில் குறைகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆன்லைன் பத்திரப்பதிவில் குறைகளை களைய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை

ஆன்லைன் பத்திரப்பதிவில் குறைகளை களைய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் தாக்கல் செய்த மனு: பதிவுத்துறை பணியாளர்களுக்கு ஆன்லைன் பதிவுக்காக பயன்படுத்தப்படும் மென்பொருளை கையாள்வதற்கு முறையாக பயிற்சி அளித்த பிறகு ஆன்லைன் பதிவு முறையை மேற்கொள்ளவும், அதுவரை ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நேரடி பத்திரப்பதிவை அதிகாரிகள் மறுக்கக்கூடாது. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் மதிப்பின்படி முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தினால்தான் பதிவை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் மறுக்கக்கூடாது. 
பதிவு செய்யப்படும் சொத்து, சொத்துக்கு உரிமைப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது சார்பதிவாளரின் கட்டாய பணியாகும். இந்த பணியை பத்திர எழுத்தர்களிடமோ, வேறு நபர்களிடமோ ஒப்படைக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, பதிவுத்துறை தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் பத்திரப்பதிவை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் என்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் பதிவில் கடைபிடிக்கப்படும் வழி முறைகளில் உடனடியாக பதிவை மேற்கொள்ள முடியவில்லை. 
3 நாள்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்கள், வங்கியில் கடன் வாங்கியவர்கள் பத்திரம் பதிய முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். 
எனவே இந்த குறைகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார். 
இதையடுத்து ஆன்லைன் பதிவு முறையில் குறைகளை களைவதற்கும், மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பதிவுத்துறை தலைவர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com