கயவர்களுடன் கூட்டணி கிடையாது: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

கயவர்களுடன் கூட்டணி கிடையாது. மக்கள் நலமே எனது கொள்கை என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் பொதுசேவையில் சாதனைப் படைத்த சுமதி, திருநங்கை சுதா, காந்திமதியை கெளரவித்தார்  நடிகர் கமல்ஹாசன். 
சென்னையில் வியாழக்கிழமை மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் பொதுசேவையில் சாதனைப் படைத்த சுமதி, திருநங்கை சுதா, காந்திமதியை கெளரவித்தார்  நடிகர் கமல்ஹாசன். 

கயவர்களுடன் கூட்டணி கிடையாது. மக்கள் நலமே எனது கொள்கை என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் தின பொதுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொது தொண்டாற்றித் வரும் சுமதி, சுதா, காந்திமதி ஆகிய பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது:
இன்று உங்கள் முன்பு தொண்டனாக வந்திருக்கிறேன். இனி சினிமா என்னவாகும் என்கிறார்கள். அதற்கு நல்ல கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
நீதி காப்பவர்களே அநீதி: கடந்த சில ஆண்டுகளில் 3 கோடியே 60 லட்சம் பெண்கள் பிறக்காமல் தடுக்கப்பட்டார்கள். அதற்கும் திருச்சியில் கொல்லப்பட்ட என் சகோதரிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நீதி காக்க வேண்டியவர்களே அநீதி செய்து இருக்கிறார்கள். காவல் துறையை பொதுவாகச் சொல்லவில்லை. காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என நீதிபதியே பரிந்துரை செய்யாமல் போனதால்தான் இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
மக்கள் நலனே கொள்கை: மய்யம் என்ற பெயர் பற்றி கேலி பேசுகிறார்கள். எல்லா காலங்களிலும் மய்யத்திலேயே இருப்பீர்களா என்கிறார்கள். மய்யத்தில் இருந்து பார்ப்போம். அதிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாவின் கொள்கைகளின் மேல் நின்று கொண்டுதான் இந்த ஆட்சி நடக்கிறது. கொள்கை தெரிந்தவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்கள் இனி ஒதுங்கக் கூடாது. அவர்கள் எல்லாம் எங்கள் கட்சிக்கு வர வேண்டும். மக்கள் நலனே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. அரசியலின் மாண்பை மீட்டெடுக்கும் வேலை இருக்கிறது. அதற்கு எனக்கு துணையாக இருங்கள்.
விலை போக மாட்டேன்: நான் விலை போக மாட்டேனோ, அப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியும் விலை போகக் கூடாது. இப்படி ஒரு கட்சியை துவங்காமல், இந்த மாதிரி கூட்டத்தைக் கூட்டாமல், ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து, எல்லோரையும் போல சென்றிருக்கலாம். அப்படி நடந்தால் மக்களாட்சி மலராது என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இற்ங்கியிருக்கிறேன். கயவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நம்பிக்கையாகச் சொல்கிறேன். இது தேர்தல் வாக்குறுதி அல்ல. கட்சி ஆரம்பிக்கும் போதே அளிக்கும் வாக்குறுதி. 
அம்மாவே தலைவி: என் அம்மாதான் எனக்குத் தலைவி. அவர் கொடுத்த தைரியத்தில்தான் இங்கே நிற்கிறேன். அவர் கொடுத்துச் சென்ற அன்பைத்தான் உங்களுக்கெல்லாம் பகிர்கிறேன். அவரை மிஞ்சிய தலைவியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். 
பகுத்தறிவு வெகுண்டு எழும்: நான் என்னுடைய மூன்றாவது வயது வரை ஸ்லோகங்கள் சொல்லி கோயில் கோயிலாகத் திரிந்தவன். சைவப் பாடல்களும், வைணவப் பாடல்களும் மனப்பாடம் எனக்கு. அந்த சமயத்தில் ஒரு பகுத்தறிவுக் கட்சி ஆட்சிக்கு வந்தது. எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. நான் பகுத்தறிந்தவன் என்பதாலேயே அவர்களுக்கு எந்தத் தொல்லையும் தரக்கூடாது என முடிவெடுத்தேன். அதற்குப் பெயர்தான் பகுத்தறிவு. அதனால்தான் என்னை நாத்திகவாதி என்றால் மறுக்கிறேன். பக்தி, பகுத்தறிவு இந்த இரண்டும் இல்லாமல் இந்த நாடு இல்லை. ஆனால் ஜாதி, மதத்தின் பெயரால் என் மக்களுக்கு பாதிப்பு வந்தால் இந்த பகுத்தறிவுவாதி வெகுண்டு எழுவான். அப்போது என் கைகளைக் கட்டிப் போடாமல் இயங்க விடுங்கள். அந்தக் கடமை ஆன்மிகவாதிகளுக்கும் உண்டு. அநீதியை தகர்ப்பது எங்கள் கடமை.
திருச்சி உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: திருச்சியில் காவல்துறை அத்துமீறலால் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த பணத்தைக் கொண்டு அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்றார் கமல்ஹாசன்.
தத்தெடுப்பு: நிலத்தடி நீர் சேமிப்பில் முன்னோடி கிராமமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமம் மக்கள் நீதி மய்யம் கட்சியால் தத்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com