சவால்களை எதிர்நோக்கும் மன உறுதி பெண்களுக்கு அவசியம்: கர்நாடக இசைக் கலைஞர் மஹதி

சவால்களை எதிர்நோக்கும் மன உறுதியை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றார், திரைப்பட பின்னணிப் பாடகியும், கர்நாடக இசைக் கலைஞருமான எஸ். மஹதி.
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற 'தினமணி - மகளிர்மணி பெண் சாதனையாளர்' விருது வழங்கும் விழாவில் விருதுபெற்ற ச. உமாகண்ணன், ஆ. மனோன்மணி, வெ. ஜெயபாரதி
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற 'தினமணி - மகளிர்மணி பெண் சாதனையாளர்' விருது வழங்கும் விழாவில் விருதுபெற்ற ச. உமாகண்ணன், ஆ. மனோன்மணி, வெ. ஜெயபாரதி

சவால்களை எதிர்நோக்கும் மன உறுதியை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றார், திரைப்பட பின்னணிப் பாடகியும், கர்நாடக இசைக் கலைஞருமான எஸ். மஹதி.
தினமணி, 'டாண் நீட்- ஜே.இ.இ.' பயிற்சிப் பள்ளி சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற 'மகளிர்மணி பெண் சாதனையாளர்' விருதுகள் வழங்கும் விழாவில், விருதுகளை வழங்கி அவர் பேசியது: 
ஒவ்வொரு பெற்றோருக்கும் தனது மகள் பெருமை மிகுந்தவராக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை நிறைவேறும்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும். ஒவ்வொரு சாதனையாளருக்கும் பல்வேறு குருக்கள் தேவைப்படுகிறார்கள். எனக்கு எனது பெற்றோரே முதல் குரு. வாழ்க்கை என்பது மற்றொரு குரு. நாம் சந்திக்கும் சூழல்களில் இருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டு சாதுர்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இசைதான் எனக்கு வாழ்க்கை என்று மாறியபோது அதற்கு பல்வேறு தடைக்கற்கள் வந்தன. அதனை குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் மட்டுமே தகர்த்தெறிய முடிந்தது.
உலகில் ஆண், பெண் ஆகிய இரு வர்க்கத்தினர் மட்டுமே உள்ளனர். அப்படியிருக்கையில் சமத்துவம் பேச வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இரு தரப்பினரும் சமமானவர்களே. கடவுளின் படைப்பில் பாகுபாடுகள் இருப்பது உண்மை. ஆனால், ஆண்கள் உடல் அளவில் உறுதியாக இருக்கிறார்கள். அன்பு, அரவணைப்பு உள்ளிட்ட பண்புகளுடன் மனதளவில் பெண்கள் உறுதியானவர்கள். அதனால்தான் இன்றளவும் முடிவெடுக்கும் திறனில் பெண்களே பலமிக்கவர்களாக உள்ளனர்.
சினிமா, இசை, விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு முன்னுரிமையும், சலுகையும் அளிக்கப்படுகிறது. அதற்கு பார்வையாளர்களான இந்தச் சமுதாயமும் ஒரு காரணம். பெண்கள் தடைக்கற்களைக் கண்டு தயங்கி ஒதுங்கிவிடக் கூடாது. எந்த ஒரு செயலையும் செய்து பார்க்க வேண்டும்; சவால்களை எதிர்நோக்க வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய சமூகத்தினர் மகளிருக்கு சம உரிமை அளிக்கத் தயாராக உள்ளனர். அதனை ஏற்க மகளிர் மத்தியில் தயக்கம் உள்ளது. அதனைக் கைவிட வேண்டும். பெண்களின் பன்முகத் தன்மைக்கு மத்தியில் அவர்களது அடக்கம், பணிவு காரணமாகவே கொண்டாடப்பட்டு வருகிறார்கள். பெண்களை ஒருநாள் மட்டும் கொண்டாடாமல் வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி 
ஆ. மனோன்மணி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வன விழிப்புணர்வு கல்வியாளர் வெ. ஜெயபாரதி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் ச. உமா கண்ணன் ஆகியோருக்கு பெண் சாதனையாளர் விருதுகளை எஸ். மஹதி வழங்கி கெளரவித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன், 'டாண் நீட்-ஜேஇஇ பயிற்சிப் பள்ளி' இயக்குநரும், மருத்துவருமான எஸ்.ஏ. ராஜ்குமார், நிர்வாக இயக்குநர் எஸ்.ஏ.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களை வாழ்த்தினர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ்குமார் நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து எஸ்.மஹதி குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
விழாவில், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ஆர். நீலாவதி, பேராசிரியர் சுஜாதா, எழுத்தாளர்கள் செ.திவான், நாறும்பூநாதன், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன், அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், முத்து நகர் இலக்கிய வட்டத் தலைவர் சு.அழகேசன், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி , அஞ்சல் துறை மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
விருதுபெற்றவர் ஏற்புரை.....
விருதுபெற்ற ச.உமாகண்ணன் கூறியது: கருவில் உருவானது முதல் கல்லறை புகுவது வரை வகை வகையான அடிமைத்தனம், அடக்குமுறை, பிரச்னைகளால் அவமானங்களை பெண்ணினம் அனுபவித்து வருகிறது. இந்தச் சூழலில் கழிவுகளைச் சுத்தம் செய்யும் அடிமட்டத் தொழிலாளி முதல் நாட்டையே ஆளும் உயர்மட்ட அதிகாரி வரை ஒவ்வொரு பெண்ணும் சாதனைப் பெண்ணே. 
எனக்கு கிடைத்துள்ள 'தினமணி -மகளிர்மணி பெண் சாதனையாளர் விருது' என்னும் அங்கீகாரத்தை தமது ஆசை, திறமை, தூக்கம் அனைத்தும் மறந்து, மறைத்து தனது குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் உண்மையாக உழைக்கும் தியாகச் சுடர்களான பெண்களின் மலரடிக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் அவர்.

கவிமணியின் கூற்று மெய்ப்படுகிறது!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றை மெய்ப்படுத்தும் முயற்சி நெல்லைத் தரணியிலிருந்து தொடங்குகிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
திருநெல்வேலியில் நடைபெற்ற மகளிர்மணி பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: பெண்களின் விடுதலைக்காக முதல் குரல் கொடுத்த பாரதி பிறந்த பூமியில் இருந்து 'மகளிர்மணி சாதனையாளர் விருது' வழங்கும் தினமணி நாளிதழின் முயற்சி தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெண் சாதனையாளர்களை ஆண்டுதோறும் அடையாளம் கண்டு கெளரவிக்கும் பணி தொடரும். அதன்பின், தமிழக அளவிலும் பெண் சாதனையாளர்களைக் கெளரவிக்க வேண்டும் என்கிற கனவு நனவாக வேண்டும்.
மகளிருக்காக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற சூழல் இருப்பது சரியானதல்ல. இந்தியாவில் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை பெண்கள் வகித்தாலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண்கள் வரவில்லை என்பது குறையாகவே உள்ளது. பெண்கள் குறித்த முக்கிய தீர்ப்புகள் வழங்கும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அமர்வுகளில் பெண் நீதிபதிகளே இல்லாதது கூர்ந்து கவனிக்கத்தக்கது. அதேபோல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் சாதித்தாலும்கூட இந்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உயரும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பது தலைகுனிவைத் தருகிறது. இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.
ஆண் வாரிசு என்னும் பாரம்பரிய பழக்கவழக்கம், திருமணச் செலவு போன்ற பல்வேறு காரணங்களால் மட்டுமன்றி, இன்றைய சூழலில் பெண்களை வளர்ப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாலும் ஆண்-பெண் விகிதாசார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றுவதற்கு, மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களைத் தாண்டி சாதிக்கும் பெண்களை அடையாளப்படுத்த வேண்டும். அதன் மூலம் பிற பெண்களுக்கு ஊக்கமும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துணிவும் உருவாகும்.
சங்க காலத்தில் இருந்தே பெண்களுக்கு மரியாதை செய்யும் சமூகமாகவே தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. பொதிகைச் சாரலில் இருந்து தொடங்கியுள்ள இந்த ஊக்கப்படுத்தும் முயற்சி, இந்தியாவில் சிறந்த பெண் சாதனையாளர்களாக தமிழ்ப் பெண்கள் உருவாக வழிகோல வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com