பாரதிதாசன் பல்கலை. பதிவாளரை ஆளுநரே தேர்வு செய்ய வேண்டும்

பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கு தகுதியான நபரை தமிழக ஆளுநரே தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கு தகுதியான நபரை தமிழக ஆளுநரே தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அவர்களில் தகுதியானவர்கள் கடந்தகால கல்விச் சாதனைகள் மற்றும் நேர்காணல் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இந்தப் பதவிகளுக்கான நேர்காணலில் மட்டுமின்றி, கல்விச் சாதனைகளுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் மோசடிகள் நடந்துள்ளன. இந்தத் தேர்வுகள் நடந்தபோது பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் தலைமையிலான குழுவே பல்கலைக் கழகத்தை நிர்வகித்து வந்தது. 
அவரது தலைமையிலானக் குழுதான் இந்த நேர்காணலையும் நடத்தியது. 
நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கி, அவற்றின் சராசரி அடிப்படையில்தான் தகுதி கண்டறியப்பட வேண்டும். 
ஆனால், தேர்வுக் குழுவில் இருந்தவர்களில் சுனில்பாலிவால் தவிர வேறு எவரும் மதிப்பெண் வழங்கவில்லை. இதுவும் விதிகளுக்கு எதிரானது. 
பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் நியமனம் பற்றிய அனைத்து விவரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ளன. 
நேர்காணலின் விடியோ பதிவை வழங்க பல்கலைக் கழகம் மிகவும் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது அழிக்கப்பட்டால் ஆதாரங்கள் சிதைக்கப்படும்.
எனவே, தமிழக ஆளுநர் நேர்காணலின் விடியோ பதிவைக் கைப்பற்றி பார்வையிட வேண்டும். 
அதில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தெரிவிக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக மதிப்பெண் வழங்கி, அதன் அடிப்படையில் தகுதியானவர்களை அவரே தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com