பாலேஸ்வரம் கருணை இல்லம் மீதான அரசு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை

காஞ்சிபுரம் அருகேயுள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகேயுள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தின் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக் காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இல்லத்துக்குச் சொந்தமான வேனில் காய்கறி மூட்டைகளுடன், இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரின் சடலம் எடுத்து வரப்பட்டது. இறந்தவரின் சடலத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் வேனில் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வருவாய்த் துறை, போலீஸார் உள்ளிட்ட 6 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இல்லத்தில் இருந்த 300 முதியவர்கள் அரசு காப்பகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசின் முறையான அனுமதியின்றி செயல்படும் கருணை இல்லத்தை மூட ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பி 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி இல்லத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். 
வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குநர் தாமஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்ட விதிகளைப் பின்பற்றாமல் கருணை இல்லத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
முறையான அனுமதியுடன் செயல்பட்டு வரும் இல்லத்துக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அரசின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை சட்ட விரோதம் என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். 
பின்னர் நீதிபதி, செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லத்தின் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் விளக்க கடிதத்தின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது. 
இதுதொடர்பாக தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com