பெண் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது: நடிகை கெளதமி

பிள்ளைகளை வளர்க்கும் போது ஆண், பெண் பாகுபாடின்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளையிடம் பாகுபாடு காட்டக்கூடாது என திரைப்பட நடிகை கெளதமி தெரிவித்தார்.
பெண் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது: நடிகை கெளதமி

பிள்ளைகளை வளர்க்கும் போது ஆண், பெண் பாகுபாடின்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளையிடம் பாகுபாடு காட்டக்கூடாது என திரைப்பட நடிகை கெளதமி தெரிவித்தார்.
 சர்வதேச மகளிர் தினவிழா விஐடியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நடிகை கெளதமி பங்கேற்றுப் பேசியதாவது: பெண்களின் வாழ்க்கை பெண்கள் கையில் உள்ளது. எனவே, பெண்களிடம் மாற்றம் வர வேண்டும். அப்படி வந்தால்தான் உலகில் மாற்றம் வரும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மாற்றம் வர வேண்டும் எனக் கருதுகின்றனர். அதற்கேற்ப பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளை வளர்க்கும் போது ஆண், பெண் என்ற பாகுபாடின்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளையிடம் அந்த பாகுபாடு காட்டக்கூடாது. பெண்கள் நினைத்தால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு அதனை முடிவெடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
 முன்னதாக, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
 இந்தியா மொழிகள், பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனை கடைபிடிப்பவர்களாக நமது பெண்கள் உள்ளனர். தற்போது பெண்கள் ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்பை ஏற்று வருகின்றனர். இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயகா, இந்தியாவில் இந்திராகாந்தி ஆகியோர் பிரதமராக பதவி வகித்துள்ளனர். அமெரிக்காவில் ஆணாதிக்கம் நிலவுவதால் ஹிலாரி கிளிண்டன் அதிபராக முடியவில்லை. நாட்டில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 24 முதல் 25 சதவீதம் உள்ளது. அதில் பெண்களின் அளவு குறைவாக உள்ளது. பொருளாதார சூழ்நிலையால் உயர்கல்வியில் சேர முடியாமல் உள்ளவர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கி, அதன்மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 66 சதவீதம் பேர் பெண்கள் என்றார் அவர்.
 விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
 பெண்களின் உரிமை குறித்து சுவாமி விவேகானந்தர், ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். தற்போது எல்லா துறைகளிலும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். விஐடி பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இங்கு பயிலுவோரில் 40 சதவீதம் பேர் மாணவிகள்.
 அதேபோல், ஆசிரியர்கள், ஊழியர்களில் 30 சதவீதம் பெண்கள் உள்ளனர். தவிர, விஐடியில் உள்ள கட்டடங்களுக்கு பெண் சாதனையாளர்களான ஹாங்சான், சூகி, கல்பனா சாவ்லா, இந்திரா காந்தி, அன்னை தெரசா, ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்றார்.
 முன்னதாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நடிகை கெளதமி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் புஷ்பா குரூப் கெளவரவ விருந்தினராகப் பங்கேற்றார். இணை துணைவேந்தர் எஸ். நாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமித் மகேந்திரக்கர், உதவி இயக்குநர் மேரி சாரல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com