ஈரோடு கல்லூரி ஆசிரியை சாவு: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு

தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை திவ்யா (25)
சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்த திவ்யா.
சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்த திவ்யா.

தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை திவ்யா (25) செவ்வாய்க்கிழமை இறந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
குரங்கணி வனப் பகுதியில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு கடந்த சனிக்கிழமை சென்றனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கினர். இவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடனும் 10 பேர் சிறுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களில் 16 பேர் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். 
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்னை ஜெயஸ்ரீ, ஹெலி ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மீனு ஜார்ஜ் (32) என்பவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சென்னை நிஷா (30) திங்கள்கிழமை மாலை இறந்தார். 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா (25) செவ்வாய்க்கிழமை இறந்தார்.
திருமணமாகி 2 மாதங்களே ஆன திவ்யா தனது கணவர் விவேக் உடன் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்தார். அங்கு விவேக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்நிலையில் திவ்யா செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியொன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். 
கணவன், மனைவி இருவரும் இன்னும் 10 நாள்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி இருவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது. திவ்யா இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com