மனநலக் குறைபாடுள்ளோருக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை: சுரேகா ராமச்சந்திரன்

மனநலக் குறைபாடுள்ள (டவுண் சின்ட்ரோம்) குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை, அவர்களை சாதாரண பள்ளிகளிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும்

மனநலக் குறைபாடுள்ள (டவுண் சின்ட்ரோம்) குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை, அவர்களை சாதாரண பள்ளிகளிலேயே படிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய டவுண் சின்ட்ரோம் கூட்டமைப்பின் தலைவர் சுரேகா ராமச்சந்திரன் கூறினார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
பிறக்கும் 800 குழந்தைகளில் ஒரு குழந்தைகளுக்கு டவுண் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு குறைபாடோடு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். தைராய்டு, பார்வைக் குறைபாடு, செவித்திறன் பாதிப்பு, இதயத்தில் துளைகள் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அவர்களுக்கான உடல்நலக் குறைபாடுகளில் கவனம் செலுத்தி வந்தால், படிப்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்.
மனநலக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு மனநலம் தொடர்பான பிரச்னைகளில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கென்று சிறப்புப் பள்ளிகள் அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தக் குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சாதாரண மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும். 
சில பள்ளிகள் அவ்வாறு அனுமதித்தும் வருகின்றன. மனநலக் குறைபாடோடு உள்ள குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வரை பெற்றுள்ளனர். எனவே, அவர்களைத் தனிமைப்படுத்தாமல், பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் ஜெயஸ்ரீ கோபால், குழந்தைகள் நல நிபுணர் பிரியா சந்திரசேகர், மரபணு மருத்துவ நிபுணர் சுஜாதா ஜெகதீஷ், ரெட்வுட் மான்டிசேரி பள்ளியின் இயக்குநர் மதுரா விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com