உடுமலைப்பேட்டை படுகொலை சம்பவம்: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு
உடுமலைப்பேட்டை படுகொலை சம்பவம்: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், அவரது மனைவி கெளசல்யா மீது கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
அதேசமயம், இந்த வழக்கிலிருந்து கெளசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய 8 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி. பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com