குரங்கணி காட்டுத் தீ சம்பவம்: விசாரணை அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா நியமனம்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை அதிகாரியாக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
குரங்கணி காட்டுத் தீ சம்பவம்: விசாரணை அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா நியமனம்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை அதிகாரியாக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின் புதன்கிழமை பிறப்பித்தார். உத்தரவு விவரம்:
தேனி மாவட்டத்தில் கோட்டக்குடி காப்புக்காட்டில் கடந்த 11-ஆம் தேதி நடந்த எதிர்பாராத சம்பவத்தில் பலர் இறந்தனர். காட்டில் தீ ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் என்ன, காட்டுத் தீ உருவாகும் பகுதியில் வனத் துறையால் உரிய அனுமதி பெறாமல் மலையேற்றம் நடைபெற்றது ஏன் என்பன போன்ற விஷயங்களை விரிவாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
விசாரணையின் வரம்புகள்: குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை அதிகாரியின் வரம்புகள் என்னென்ன என்பதை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, காட்டுத்தீ சம்பவம் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் என்ன என்பது விசாரிக்கப்படும்.
காப்புக் காடுகளில் மலையேற்றம் செய்வதற்கான ஒழுங்குமுறைகள் மற்றும் அனுமதிகள் மறுஆய்வு செய்யப்படும். 
மலையேற்றத்தை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும். வனத் துறையினர் தவறுகள் செய்திருந்தால் அதுகுறித்தும் விசாரிக்கப்படும்.
2 மாதங்களில் அறிக்கை: வனப் பகுதிகளில் இனி இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகள் விசாரணை அதிகாரியால் தரப்படும். விசாரணை வரம்புகளுக்கு உட்பட்டு அனைத்தையும் விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை விசாரணை அதிகாரி அரசுக்கு அளிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com