தூத்துக்குடி மாவட்டத்தைப் புரட்டிப்போட்ட மழை!: ஒரே நாளில் 1,060 மி.மீ மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை ஒரே நாளில் 1,060 மி.மீ. மழை பெய்தது.
சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகன ஓட்டிகள்.
சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகன ஓட்டிகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை ஒரே நாளில் 1,060 மி.மீ. மழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால், கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை கடல் பகுதியில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் கடந்த 10ஆம் தேதி முதலே மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீனவர்கள், கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,060 மி.மீ. மழை பதிவானது.
இதனால், தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியர் என். வெங்கடேஷ் உத்தரவிட்டார். எனினும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெற்றது. 
ரயில் நிலையம்: பலத்த மழையால் தாழ்வான பகுதியான தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் அதிகளவு தேங்கியது. நகரில் கடைசி பகுதி என்பதால் பல்வேறு இடங்களிலிருந்து வெளியான கழிவுநீரும் கலந்ததால் ரயில் நிலையம் மழைநீரில் மூழ்கி காட்சியளித்து.
இதனால், சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில் புதன்கிழமை காலை மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், ரயில் என்ஜின் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை சென்று மாற்றப்பட்டது. 
இதேபோல், காலை 8.45 மணிக்குப் புறப்பட வேண்டிய தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் ரயில், முற்பகல் 11.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மழைநீர் மாலைக்குள் வடிந்துவிட்டதால் இரவு நேர ரயில்கள் வழக்கமான இடத்திலிருந்தே இயக்கப்பட்டன.
சாலைகளில் மழைநீர்: தூத்துக்குடியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன், 1ஆம் ரயில்வே கேட் சாலை, வி.இ.சாலை, பாலவிநாயகர் கோயில் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெள்ளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். மாலைக்குள் தண்ணீர் வடிந்து சகஜ நிலை திரும்பியது.
குடியிருப்புகளுக்குள்...: மரக்குடி, பெரியகடை தெரு, பீட்டர் கோயில் தெரு, மாதா கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர். திரேஸ்புரம், மாதவன்நாயர் காலனி, வி.எம்.கோயில் தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முத்தரையர்நகரில் இரவு முழுவதும் பெய்த மழையால் சில வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
எம்.எல்.ஏ.ஆய்வு: மழை பாதித்த பகுதிகளை கீதாஜீவன் எம்எல்ஏ பார்வையிட்டார். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதை விரைந்து அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடியில் சின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலய வளாகத்தில் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. அதே பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் இரவுக்குள் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டது.
பலத்த காற்றுடன் பெய்த மழையால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்குப் பெட்டக வாகனங்கள் உள்ளே நுழையும் பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

 தூத்துக்குடியில் தண்ணீர் சூழ்ந்து காணப்படும் உப்பளங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com