மேலூரில் இன்று அமைப்பின் பெயரை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்: பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை மதுரை மாவட்டம் மேலூரில் வியாழக்கிழமை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்
மேலூரில் இன்று அமைப்பின் பெயரை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்: பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை மதுரை மாவட்டம் மேலூரில் வியாழக்கிழமை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளார். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலராக டி.டி.வி. தினகரனும் பொறுப்பேற்றனர். 
இந்நிலையில், அப்போதைய முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த 
ஓ. பன்னீர்செல்வம் தனியாக அணியாகப் பிரிந்தார். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில், சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர். அப்போது பணப் பட்டுவாடா புகாரில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே இரு அணிகளும் இணைந்த நிலையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவர் நியமனமும் செல்லாது எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து டி.டி.வி. தினகரன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
தனி அணியாகச் செயல்பட்டு வந்த தினகரன், அரசியல் ரீதியான தனது பயணத்தை தீவிரப்படுத்தும் வகையில் அமைப்பின் பெயரையும், கொடியையும் மதுரை மாவட்டம் மேலூரில் வியாழக்கிழமை (மார்ச் 15) அறிவிக்க உள்ளார். இதற்கென பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினகரன் அணியின் அமைப்புச் செயலரும், மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ஆர். சாமி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டு தனி அணியாக செயல்பட்டபோது முதல் பொதுக் கூட்டம் மேலூரில் தான் நடைபெற்றது. இங்கு திரண்ட கூட்டம், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அமைப்பின் பெயரை மேலூரில் அறிவிக்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com