நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.11,073 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ 11,073.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.11,073 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ 11,073.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகளின் தரத்தை மேம்படுத்துவும், சீரான கால இடைவெளியில் சாலைகளைப் பராமரிக்கவும் ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் நிதியோடு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக ரூ. 544 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் குறைந்தபட்சம் இருவழித்தடச் சாலைகளாகவும், மாவட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் குறைந்தபட்சம் இடைவழித்தடச் சாலைகளாகவும் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், எஞ்சியுள்ள 54 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளையும், 34 கி.மீ. நீளமுள்ள மாவட்ட முக்கியச் சாலைகளையும் ரூ.80 கோடியில் அகலப்படுத்துவதற்கான பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். 

ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் நிதி ஆண்டில் 1,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளையும், 4,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளையும் அரசு மேற்கொள்ளும். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் கோட்டங்களில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்திப் பராமரிக்கும் பணிகள் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் பராமரிப்பு முறை 2018-19 ஆம் ஆண்டில் பழனி கோட்டத்திற்கும் நீட்டிக்கப்படும். 
ஊரகச் சாலைகளைத் தரம் உயர்த்த ரூ.1000 கோடி: ஊரகச் சாலைகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 608 கோடி ரூபாய் செலவில் 1,435.96 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளையும், ஊராட்சி சாலைகளையும் தரம் உயர்த்தும் பணிகளை அரசு ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், கூடுதலாக 2,500 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் ரூ.1,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
உலக வங்கி கடனுதவியுடன் 'தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் 2-ஆவது கட்ட திட்டப் பணிகள் ரூ. 5,171 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2017-18 ஆம் ஆண்டில் ரூ. 413 கோடியில், திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் இடையிலான சாலையில் 45 கி.மீ. நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணிகளும், ரூ. 712 கோடி செலவில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவிநாசி இடையிலான சாலையில் 71 கி.மீ. நீளமுள்ள சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தும் பணிகளும் அரசு - தனியார் துறை பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.482.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஓர் அங்கமான சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளையும், துறைமுகங்களையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 6,448.24 கோடி செலவிலான, 654.54 கி.மீ. நீளமுள்ள 14 சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியைப் பெறுவதற்காக மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. 
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் ரூ.12,301 கோடி செலவில் செயல்படுத்தப்படவிருக்கும் சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டத்தின் திருத்திய விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலை எண்.5-ஐ இணைக்கும் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான வடக்குத் துறைமுக அணுகுசாலையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 200.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தமாக ரூ 11,073.66 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com