கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து தமிழகத்தில் முக்கியக் கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
இந்த நோட்டீûஸ ரத்து செய்யக்கோரி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில் வளாகங்களில் கடைகள் வைத்துள்ள கடையின் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்கவும், மாற்று இடம் வழங்கும் வரை கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, அதுவரை கடைகளை அகற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உத்தரவிட்டு விசாரணை மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல, புதுமண்டபம் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுமண்டபம் கடை வியாபாரிகள் சங்கச் செயலர் ஜி.முத்துப்பாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புதுமண்டபம் பகுதியில் உள்ள கடைகளைத் திறந்து வியாபாரிகள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், வியாபாரம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com