வேலை என்பது என்ன? அர்த்தம் சொல்கிறார் திருப்பூர் கல்லூரி மாணவி

குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் உதவ எத்தனையோ பெண்கள் சவாலான பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி செய்யும் பணி அதற்கெல்லாம் ஒரு படி மேல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
வேலை என்பது என்ன? அர்த்தம் சொல்கிறார் திருப்பூர் கல்லூரி மாணவி


திருப்பூர்: குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் உதவ எத்தனையோ பெண்கள் சவாலான பணிகளை எடுத்துச் செய்கிறார்கள். திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி செய்யும் பணி அதற்கெல்லாம் ஒரு படி மேல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

திருப்பூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் சண்முகப்பிரியா (20) என்ற பெண் தனது தந்தைக்கு உதவியாக இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார்.

தந்தை சின்னசாமி ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தும் இறைச்சிக் கடையில் இறைச்சியைக் நறுக்கிக் கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

பல ஆண்டுகாலமாக எனது தந்தை இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். எனது சகோதரரும் இதே வேலையைத்தான் செய்கிறார். எனது தந்தைக்கு உதவி செய்ய விரும்பி இந்த பணியை கடந்த 2 ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்கிறார் சண்முகபிரியா.

ஆரம்பத்தில் இந்த வேலை சற்று சிரமமாக இருந்தாலும், தற்போது லாவகமாகவே வேலை செய்கிறார். எனது தந்தைக்கு உதவி செய்வதால் சந்தோஷம் கிடைக்கிறது. எனது வேலையால் எனது கல்வி செலவுக்கும் பணம் கிடைக்கிறது என்கிறார்.

என் உறவினர்கள் பலரும் பெண்ணை படிக்க வைக்க வேண்டாம் என்கிறார்கள். ஆனால் என் தந்தை எனது படிப்புக்கு உறுதுணையாக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார் சண்முகபிரியா.

எனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் நான் இறைச்சிக் கடையில் பணியாற்றுவது தெரியும். அதனால் வெட்கப்பட என்ன இருக்கிறது? பலரும் என்னை பாராட்டவே செய்கிறார்கள். நல்ல வேலையைத்தான் செய்கிறாய். எந்த பணியுமே தரம் தாழ்ந்ததோ செய்யக் கூடாததோ இல்லை. மனசாட்சிக்கு உட்பட்டு எந்த வேலையையும் செய்யலாம் என்று வேலை என்பதற்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறார் சண்முகப்பிரியா.

உங்கள் மகளை இப்படி இறைச்சிக் கடையில் வேலை செய்ய விடலாமா என்று பலரும் தந்தை சின்னசாமியை கேட்கிறார்கள். அதற்கு அவர் தரும் பதில், நாங்கள் பல ஆண்டுகாலமாக இந்த பணியைத்தான் செய்கிறோம். பிறகு என் மகளை இந்த வேலை செய்யக் கூடாது என்று எப்படி சொல்வது, அவள் நல்ல வேலையைத்தான் செய்கிறார். அது அவளது படிப்புக்கும் உதவுகிறது என்று தெளிந்த நீரோடைப்போல பேசுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com