காவிரி வாரியம்: 29-ஆம் தேதி வரை காத்திருப்போம்: எதிர்க்கட்சியினருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடுவான மார்ச் 29-ஆம் தேதி வரை காத்திருப்போம் என்று எதிர்க்கட்சியினரை துணை முதல்வர்
காவிரி வாரியம்: 29-ஆம் தேதி வரை காத்திருப்போம்: எதிர்க்கட்சியினருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடுவான மார்ச் 29-ஆம் தேதி வரை காத்திருப்போம் என்று எதிர்க்கட்சியினரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஆந்திர மாநில பிரச்னையையும், காவிரி விவகாரத்தையும் இணைத்துப் பேசுவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:-
மு.க.ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. 
இதையடுத்து, சட்டப் பேரவையில் கடந்த 15-ஆம் தேதியன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஏதாவது பதில் வந்துள்ளதா?
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் பிரச்னையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அழுத்தம் தந்துள்ளார். மாநிலத்தின் உரிமைகளைக் காப்பதற்காக இப்படியொரு அழுத்தத்தைத் தந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடு முடிவடைய 9 நாள்களே உள்ளன. மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.
எனவே, மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஆந்திர முதல்வர் எத்தகைய முனைப்பான நடவடிக்கையில் ஈடுபட்டாரோ அதே நடவடிக்கையில் தமிழகமும் ஈடுபட வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கக் கூடிய வகையில் அங்குள்ள எம்.பி.,க்களுக்கு தகவல் அனுப்பிட வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதால் மத்திய அரசு கவிழ்ந்து விடாது. அதேசமயம், காவிரி பிரச்னையில் நமது மாநிலத்துக்காக அழுத்தத்தை நாம் தந்திட அதுவகை செய்யும் என்றார் ஸ்டாலின்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அது குறித்து விவாதிக்க, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. முதல்வரின் ஆலோசனையைப் பெற்று, தமிழக தலைமைச் செயலாளரும் கூட்டத்தில் பங்கேற்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றம் வழங்கியுள்ள அவகாசத்தின்படி, மார்ச் 29-ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. எனவே, அதுவரை பொறுமையுடன் இருந்து பார்க்க வேண்டும். அதன்பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.
காவிரி விவகாரத்துக்காக, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரச்னைக்காக நாடாளுமன்றம் ஒரு வாரம் முடக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இதனை அதிமுக எம்.பி.-க்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
பொறுமையாக இருப்போம்: அதே சமயம், ஆந்திர மாநிலத்தின் பிரச்னையையும், காவிரி நதிநீர் விவகாரத்தையும் இணைத்துப் பேச வேண்டாம். மத்திய அரசுடன் அவர்கள் நான்கு ஆண்டுகளாகக் கூட்டாக இருந்தார்கள். ஆந்திர முதல்வர் மாநில உரிமைகளைக் காக்கிறார் எனவும், நாம் விட்டுக் கொடுப்பது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்கிறார்.
அந்த மாநில பிரச்னையை, காவிரி விவகாரத்துடன் இணைக்க வேண்டாம். காவிரிப் பிரச்னையில் நமது உரிமைகளை தொடர்ந்து நிலை நாட்டுவோம். எனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசம் வரை பொறுமையாக இருப்போம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் நாம் அனைவரும் கூடி நல்ல முடிவை எடுப்போம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடு நெருங்குகிறது: காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னையில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. ''காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை இறுதித் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
மீண்டும் ஆலோசிக்க முடிவு
காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுக எம்.பி.-க்கள் ராஜிநாமா செய்தாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று மக்களவை துணைத் தலைவரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான மு.தம்பிதுரை ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு வரை பொறுத்திருப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காரணமாக உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையோ அல்லது பிரதான எதிர்க்கட்சிகளையோ அழைத்துப் பேச தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைச் சுட்டிக் காட்டி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், இதுகுறித்த விஷயங்களை எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே தமிழக அரசு முடிவெடுக்க இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com