தமிழகத்தின் கடன் அளவு அதிகரிக்கக் காரணம் என்ன?: திமுக புகாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

உதய் திட்டத்தைச் செயல்படுத்தியது, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது போன்ற காரணங்களால் கடன் அளவு அதிகரித்திருப்பதாக துணை முதல்வரும்,
தமிழகத்தின் கடன் அளவு அதிகரிக்கக் காரணம் என்ன?: திமுக புகாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

உதய் திட்டத்தைச் செயல்படுத்தியது, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது போன்ற காரணங்களால் கடன் அளவு அதிகரித்திருப்பதாக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
மேலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் கடன்களின் அளவு குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை தொடங்கியது. விவாதத்தை திமுக உறுப்பினர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். அப்போது நடந்த விவாதம்:-
ப.ரங்கநாதன் (திமுக): பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் கடன் அளவு ரூ.3.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடன்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.45 ஆயிரம் கடன் சுமை உள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கடன்களைப் பொருத்தவரையில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென்று வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசைப் பொருத்தவரையில், நிதி நிலை அறிக்கை மதிப்பீடுகளில் அது 22.29 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பொதுக்கடன் பெற்றுத்தான் திட்டப் பணிகளை மேற்கொள்கின்றன. கடன் அளவு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. 2018-19-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, ஆந்திரத்தில் 24.09 சதவீதமாகவும், மத்தியப்பிரதேசத்தைப் பொருத்தவரை 26.34 சதவீதமாகவும், கேரளத்தில் 30.70 சதவீதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 29.78 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 37.63 சதவீதமாக உள்ளது.
கடன் உயரக் காரணம்: தமிழகத்தின் நகரக் கடன் அளவு உயர்ந்ததற்கு முக்கிய காரணம், மின்சார வாரியம் செயல்படுத்திய உதய் திட்டம்தான். வாரியத்தின் ரூ.22,815 கோடி கடன்களை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், 2016-17-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.60 ஆயிரத்து 298.09 கோடி அளவுக்கு கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடனின் விகிதம் அதிகரித்து வருவதற்கு ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதே காரணம். இந்த இரண்டு திட்டங்களால்தான் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளிலும் கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.
இந்தச் செலவுகளால் ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிப்பதற்கு வருவாய் வரவுகளில் உயர்வு இல்லை. குறிப்பாக, மதுபானக் கடைகள் மூலமாக கிடைக்கப் பெறும் வணிக வரிகளிலும், ஆயத்தீர்வைகளின் வளர்ச்சி விகிதங்களிலும் கணிக்கப்பட்ட அளவுக்கு வருவாய் இல்லாததால் கடன் சுமை அதிகரித்துள்ளது என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com