பிளஸ் 2: இயற்பியல், பொருளியல் வினாத்தாள்கள் எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், பொருளியல் வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், பொருளியல் வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 19) நடைபெற்றது. இந்த வினாத்தாள் குறித்து சென்னையைச் சேர்ந்த புனிதா, ஹேமலதா, கவிநயா, தீபக் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கூறியது: இயற்பியல் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்றிருந்த 30 கேள்விகளுக்கும் எளிதில் பதிலளிக்க முடிந்தது. பகுதி 3-இல் 5 மதிப்பெண் பகுதியில் வினா எண் 51 முதல் 62 வரை 12 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 7 வினாக்களுக்கு மட்டும் பதிலளித்தால் போதும் என்றாலும் கட்டாய வினா (கேள்வி எண் 60) தவிர அனைத்து வினாக்களும் ஒரளவுக்கு எளிதாகவே இருந்தன. 
அதிக மதிப்பெண் கிடைக்கும்: குறிப்பாக அந்தப் பகுதியில் டேனியல் மின்கலத்தின் செயல்பாட்டினை படத்துடன் விளக்குக, ஒளிமின் விளைவிற்கான ஐன்ஸ்டீன் சமன்பாடு என அரையாண்டு, திருப்புத் தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று 10 மதிப்பெண் பகுதியில் ஒரு கட்ட ஏ.சி. மின்னியற்றியின் தத்துவம் உள்பட வரைபடம், எடுகோள்கள் சார்ந்த வினாக்கள் எளிமையாக இருந்தன. இதனால் இயற்பியல் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர். 
பொருளியல் தேர்வு: கலைப்பிரிவு மாணவர்களுக்கு பிரதான தேர்வுகளில் ஒன்றான பொருளியல் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 3 மதிப்பெண் பகுதியில் ஏற்கெனவே பலமுறை கேட்கப்பட்ட முதலாளித்துவம் என்றால் என்ன, கிஃபன் புதிர், நீர்மை விருப்பக் கோட்பாட்டின் மூன்று நோக்கங்கள் என மாணவர்களுக்கு நன்கு விடை தெரிந்த வினாக்கள் இடம்பெற்றிருந்தன. வினாத்தாளின் முக்கியப் பகுதியான பகுதி 7-இல் (20 மதிப்பெண்) பொருளாதாரத்தைப் பற்றி இலயனல் ராபின்சின் இலக்கணம், முற்றுரிமையின் சாதக, பாதகங்களை ஆராய்க என பெரிதும் எதிர்பார்த்த கட்டுரை வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தன என மாணவர்கள் தெரிவித்தனர்.
44 மாணவர்கள் பிடிபட்டனர்: இயற்பியல், பொருளியல் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட மொத்தம் 44 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 தனித்தேர்வர்கள், 5 பள்ளி மாணவர்கள் என 16 பேர் பிடிபட்டனர் என தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
ஒரு வார இடைவெளிக்குப் பிறகு... அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வேதியியல் தேர்வும், கலைப்பிரிவு மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் தேர்வும் மார்ச் 26-இல் (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com