நாட்டின் முன்னேற்றத்துக்கு ஊழலே தடை: ஆளுநர்

காந்தியடிகள் விரும்பியவாறு நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதில், ஊழல் பெரும் தடையாக இருப்பதாகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
அருட்செல்வர் நா.மகாலிங்கம் விருதை ஜி.டி.கோபாலுக்கு வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், கே.சி.டி. கல்லூரித் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், துணைத் தலைவர் மாணிக்கம், 
அருட்செல்வர் நா.மகாலிங்கம் விருதை ஜி.டி.கோபாலுக்கு வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், கே.சி.டி. கல்லூரித் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், துணைத் தலைவர் மாணிக்கம், 

காந்தியடிகள் விரும்பியவாறு நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதில், ஊழல் பெரும் தடையாக இருப்பதாகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
கோவை, சரவணம்பட்டி கே.சி.டி. தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் நா.மகாலிங்கத்தின் 95 -ஆவது பிறந்த நாள் விழா, நிறுவனர் நாள் விழாவாக மார்ச் 18 -ஆம் தேதி தொடங்கி 23 -ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அருட்செல்வர் நா.மகாலிங்கம் பெயரில் விருது வழங்கும் விழா, புதுப்பிக்கப்பட்ட காந்தியடிகள் நூலகத்தின் திறப்பு விழா, ஞான சபை எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தின் திறப்பு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனத்தின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை ஜி.டி. தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.டி.கோபால், கல்வியாளர் அவ்வை நடராசனுக்காக அவரது மகன் அருள் ஆகியோருக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் விருதுகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: காந்தியடிகள் தமிழகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார். சபர்மதியில் ஆஸ்ரமம் தொடங்கியபோது அவருடன் இருந்த 25 பேரில் 13 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியடிகளின் உடை பழக்கத்தையே மாற்றிய பெருமை மதுரைக்கு உண்டு.
சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா நேர்மையானவர்களைக் கொண்ட நாடாகவும், ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானதாகவும், முன்னேறிய நாடாகவும் இருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நாடு இன்று இல்லை. அதற்கு காரணம் ஊழல்தான். ஜ
ப்பான், சீனா போன்ற நாடுகள் வளர்ந்திருப்பதற்கு காரணம் அங்கு ஊழல் இல்லை. நம்மாலும் அப்படி வளர முடியும். அதற்கு நாம் அனைவரும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். நமது தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே நம்மால் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க முடியும் என்றார் ஆளுநர்.
முன்னதாக, கல்லூரியைச் சேர்ந்த 1,025 மாணவ -மாணவிகளுக்கு ரூ.1.02 கோடி கல்வி உதவி வழங்கும் மகாத்மா காந்தி கல்வி உதவித் தொகை திட்டத்தை தொடக்கி வைத்த ஆளுநர், மத்திய நூலகம், ஞான சபை தியானக் கூடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.
தமிழில் பேசிய ஆளுநர்: தான் பங்கேற்கும் விழாக்களில் தமிழில் சில வார்த்தைகள் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் புரோஹித், இந்த விழாவிலும் தமிழில் பேசினார். பேசத் தொடங்கியதும், 'அனைவருக்கும் காலை வணக்கம்' எனக் கூறிய அவர், 'அனைவரும் எப்படி இருக்கின்றீர்கள், செளக்கியமாக இருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
அதைத் தொடர்ந்து மக்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர், அதை விளக்குவதற்காக 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்' எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com