ராம ராஜ்ஜிய ரதத்திற்கு தமிழக எல்லையில் வரவேற்பு: தடையை மீறி எதிர்ப்புத் தெரிவித்த நூற்றுக்கணக்கானோர் கைது

தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராம ராஜ்ஜிய ரதத்திற்கு தமிழக - கேரள எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தடையை மீறி ரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
செங்கோட்டையில் ராம ராஜ்ஜிய ரதத்திற்கு பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
செங்கோட்டையில் ராம ராஜ்ஜிய ரதத்திற்கு பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராம ராஜ்ஜிய ரதத்திற்கு தமிழக - கேரள எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தடையை மீறி ரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கடந்த மாதம் 13ஆம் தேதி அயோத்தியில் தொடங்கியது. நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்திட முடிவு செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் இந்த ரத யாத்திரை முடிவடைந்து, செவ்வாய்க்கிழமை காலை 9.10 மணிக்கு தமிழக எல்லையான புளியரை அருகேயுள்ள கோட்டைவாசல் பகுதியை வந்தடைந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர், புளியரை, செங்கோட்டை, இலஞ்சி வழியாக ரதம் தென்காசியை வந்தடைந்தது. தென்காசி மேலமாசிவீதி வழியாக காசிவிஸ்வநாதர் கோயில் பகுதிக்கு வந்த ரதத்திற்கு பக்தர்களும், பொதுமக்களும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நான்கு ரதவீதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் வழியாக கடையநல்லூர் நோக்கிச் சென்றது.
வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, செயலர் சங்கரசுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் ராஜ்குமார், சக்திபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், இந்த ரதம் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் வழியாக மதுரை சென்றது.
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: இதற்கிடையே, ராம ராஜ்ஜிய ரதம் தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 19 முதல் 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தமிழக - கேரள எல்லையான செங்கோட்டை பகுதியில் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
இந்நிலையில், ரதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தென்காசிக்கு வந்து தங்கியிருந்த தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மாநிலச் செயலர் மைதீன் சேட்கான், திராவிடர் விடுதலைக் கழக நிறுவனர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழக நிறுவனர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 31பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.
செங்கோட்டை காந்தி சிலை முன் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ரத யாத்திரை வருகையையொட்டி, செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் சுமார் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர 32 தாற்காலிக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்: விஎச்பி ரதயாத்திரையைக் கண்டித்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர், கோவை, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் திமுக, விசிக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com