ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடம் ஜீயரின் பிருந்தாவன பிரவேசம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் ஜீயர் சென்னையில் திங்கள்கிழமை திருநாட்டை அலங்கரித்தார். அவரின் பிருந்தாவன பிரவேசம் திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் உள்ள ஆசிரமத்தில்
பிருந்தாவன பிரவேசத்துக்கு முன்பு ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பக்தர்கள்,.
பிருந்தாவன பிரவேசத்துக்கு முன்பு ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பக்தர்கள்,.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் ஜீயர் சென்னையில் திங்கள்கிழமை திருநாட்டை அலங்கரித்தார். அவரின் பிருந்தாவன பிரவேசம் திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் உள்ள ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில் தங்கியிருந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் மடத்தின் 11ஆவது பட்டம் ஜீயருக்கு மார்ச் 19ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் திருநாட்டை அலங்கரித்தார்(காலமானார்).
இதனையடுத்து மயிலாப்பூர் மடத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பீடாதிபதிகளின் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹாதேசிகன் சுவாமிகளின் விருப்பப்படி ஸ்ரீரங்கத்தில் பிருந்தாவன பிரவேசம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
அதற்காக அவரது உடல் திங்கள் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை, அஹோபில மடத்தின் ஜீயர், மன்னார்குடி மடத்தின் ஜீயர், நித்தியானந்தர் தங்களது சீடர்களுடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 
காலை 8 மணியளவில் பிரம்மரதம் ஸ்ரீரங்கத்தின் உத்திர வீதிகளில் வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு திருமஞ்சனம் (பெருமாளுக்கு செய்வதுபோன்று) நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மூங்கில் கூடையில் வைக்கப்பட்ட ஜீயரின் உடல் கொள்ளிடக் கரையில் உள்ள பிருந்தாவனத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
அங்கு ஏற்கெனவே, அமைக்கப்பட்டுள்ள திருக்குடந்தை ஆண்டவன் ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அருகிலேயே ஸ்ரீரங்க ராமானுஜ மஹா தேசிகன் ஸ்வாமிகள் பிருந்தாவன பிரவேசம் நடைபெற்றது. 
அத்துடன் மஹாதேசிகன் ஸ்வாமிகள் பயன்படுத்திய திருத்தண்டம், திருக்கமண்டலம், காஷாயம், சாலகிராமம் உள்ளிட்டவை திருப்புக்குழியில் வைக்கப்பட்டது. பூர்வாஸ்ரம திருக்குமாரர்கள் 5 பேர் பிருந்தாவனப் பிரவேசத்துக்குண்டான கைங்கர்யங்களை செய்தனர்.
குறிப்பிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 11.30க்குள் இந்த பிருந்தாவன பிரவேசம் நடைபெற்றது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும், பிருந்தாவனம் வந்திருந்து ஸ்வாமிகளை தரிசித்து சென்றனர்.
பிருந்தாவன பிரவேசத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து திவ்யதேசங்களின் சார்பிலும், மஹாதேசிகன் ஸ்வாமிகளுக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது. ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி சார்பில் நிகழ்விடத்துக்கு சென்றுவர இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com