"மருத்துவமனை முறைப்படுத்தல் சட்டம்: போலி மருத்துவர்கள் முற்றிலும் களையப்படுவர்'

மருத்துவமனை முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் தமிழகத்தில் போலி மருத்துவர்களை 100 சதவீதம் ஒழிக்க முடியும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

மருத்துவமனை முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் தமிழகத்தில் போலி மருத்துவர்களை 100 சதவீதம் ஒழிக்க முடியும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
 தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:
 தமிழகத்தில் செயல்படும் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த தற்போது எந்த அமைப்பும் இல்லை. மருத்துவமனைகளின் விவரங்கள், படுக்கைகளின் எண்ணிக்கை, அளிக்கப்படும் சிகிச்சை, அங்குள்ள வசதிகள் போன்றவை குறித்த விவரங்களை ஒரு தனிச் சட்டம் வாயிலாக பெறுவதற்கு வழிவகை இல்லை. எனவே, இவற்றை முறைப்படுத்தும் வகையில் தமிழக அரசால் 1997 -ஆம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தல்) சட்டம் இயற்றப்பட்டது. எனினும், விதிகள் வகுக்கப்படாததால் இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதலுடன் இது விரைவில் சட்டமாக்கப்படும்.
 பதிவு செய்வது கட்டாயம்: இந்தச் சட்டத்தின்படி, ஏற்கெனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் உள்ளிட்ட அனைத்தும் 9 மாதங்களுக்குள்ளும், புதிதாக திறக்கப்பட உள்ள மருத்துவமனைகள் 6 மாதத்துக்குள்ளும் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழக அரசிதழில் வெளியிடப்படும். இந்தச் சட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அலோபதி மருத்துவமனைகள், ஆயுஷ் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் வரன்முறைப்படுத்தப்படும்.
 தரமான சிகிச்சை கிடைக்கும்: இதன் மூலம் தமிழகத்தில் போலி மருத்துவர்களை 100 சதவீதம் ஒழிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com