கிரானைட் முறைகேடு: இரு நிறுவனங்களின் ரூ.52 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் ரூ.52 கோடி மதிப்புள்ள 284 சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் ரூ.52 கோடி மதிப்புள்ள 284 சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
 மதுரை மேலூர், மதுரை கிழக்கு பகுதியில் சுமார் 194 தனியார் கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் பெரும்பாலானவை அரசின் விதிமுறை மீறியும், அரசின் நிலத்தை ஆக்கிரமித்தும் செயல்படுவது கடந்த 2014 -ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட 84 குவாரிகளின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும் காவல்துறையினரும் இந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை மதுரை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஓம் ஸ்ரீகிரானைட்ஸ் நிறுவனம், பல்லவா கிரானைட்ஸ் நிறுவனம் ஆகியவை மதுரை சுற்றுப்புறப் பகுதிகளான மேலூர், கீழவளவு, ராசிபுரம் ஆகியப் பகுதிகளில் அரசு நிலங்களில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து, பல வண்ண கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி கனரக இயந்திரங்கள் மூலமும், அதிக சக்திக் கொண்ட வெடிகள் மூலம் தகர்த்து எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது. அப்படி வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை பதுக்கி வைத்து விற்று, அதிக அளவில் லாபம் ஈட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த முறைகேடு குறித்து மதுரை காவல்துறை இந்த இரு நிறுவனங்கள் மீதும் 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த இரு நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிக்கைகளை காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 ரூ.52 கோடி சொத்து முடக்கம்: இதையடுத்து, முறைகேடான வழியில் அரசு சொத்தை அபகரித்து பணம் ஈட்டிய இரு நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க அமலாக்கத் துறைக்கு காவல்துறை பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையிலும், பணமோசடி சட்டத்தின் கீழ், இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான ரூ.52 கோடி மதிப்புள்ள 284 அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை முடக்கியது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com