விரைவாக நீதி வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியம்: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

விரைவாக நீதி வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
விரைவாக நீதி வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியம்: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

விரைவாக நீதி வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
 நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், இரணியல், பத்மநாபபுரத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, நீதிமன்றங்களை திறந்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது:
 குமரி மாவட்ட மக்களின் வசதிக்காக இன்று 5 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீதித்துறையினர் சேவை நோக்குடன் செயல்பட வேண்டும். நீதித்துறையில் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் சரியான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது அதைவிட முக்கியம். காலதாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். விரைவாக நீதி வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
 நீண்டநாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் முன்வர வேண்டும். நீதித்துறை சேவை துறையாக இருக்க வேண்டும். நீதித்துறை சிறப்பான சேவையை ஆற்றினால், ஏராளமான பொதுமக்கள் நீதிமன்றங்களை நாடுவர். வழக்குரைஞர்களும், நீதிபதிகளும், நீதிமன்றத்தை நீதி கோயிலாகக் கருதவேண்டும்.
 குடும்ப நல நீதிமன்றங்கள் கருத்து வேறுபாடுகளால் தனித்திருக்கும் தம்பதிகளை ஒன்றிணைப்பதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும். பெற்றோரை பிரிந்திருக்கும் குழந்தைகள், கணவரை பிரிந்திருக்கும் மனைவியை இணைக்கும் பாலமாக குடும்ப நல நீதிமன்றங்கள் திகழவேண்டும் என்றார் அவர்.
 சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம்: தமிழக நீதித் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், ரூ. 639 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்கு ரூ. 155 கோடியாகும். தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த ஓராண்டில் புதிய நீதிமன்றங்கள் கட்டுமானம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 1,355 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் புதிதாக 273 நீதிமன்றங்கள் கட்டப்படும் என்று 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றில், 150 நீதிமன்றங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கூடுதலாக 197 நீதிமன்றங்கள், நீதித்துறைக்கான கட்டடங்கள் கட்டும் பணிக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நீதித்துறையில் காலியாக உள்ள 3,400 இடங்களை நிரப்புவதற்கு, அரசு ரூ. 117 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1,400 இடங்களும் அடங்கும். நீதித் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணிகள் விரைவாக முடிக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நீதித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார் அமைச்சர்.
 அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி:
 திண்டுக்கலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, நன்னடத்தை அடிப்படையில் சிறையில் உள்ள சுமார் 1,600 கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சிறைக் கைதிகள் விடுதலை செய்வதற்கென எந்த ஒரு காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை. இது ஒரு நீண்டகால நடைமுறை. இருப்பினும், சிறைக் கைதிகள் பற்றிய விவரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கு உள்பட்டு, அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் தேதி வரை உள்ளது. அதன்பிறகே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிப்பேன் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com