போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை: தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரின் பேரில், போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையரின்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரின் பேரில், போக்குவரத்துத் துறை கூடுதல் ஆணையரின் திருச்சி வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, 223 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
 சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத் துறையில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வருபவர் பி. முருகானந்தம் (56). நிர்வாகப் பிரிவு இணை ஆணையராகப் பதவி வகித்து வந்த இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று கூடுதல் ஆணையரானார்.
 இந்நிலையில், முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்திருப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, முருகானந்தம் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் நடுத்தெருவில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். முருகானந்தம் சென்னையில் இருந்ததால், வீட்டில் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.
 இந்த சோதனையில் 223 பவுன் தங்கம், ஒன்றேகால் கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டது. காலையில் தொடங்கியசோதனை இரவு 7 மணி வரை நீடித்தது.
 முருகானந்தத்தின் சொந்த ஊர் அரவக்குறிச்சி வட்டம் மலைக்கோவிலூர் என்பதால், அங்குள்ள வீட்டிலும், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் போலீஸார் தனித்தனியே சோதனை மேற்கொண்டனர். இதேபோல், முருகானந்தத்தின் மனைவி லீலாவதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com