லஞ்ச வழக்கு: பொது கணக்காயரிடம் 15 மணி நேரம் சிபிஐ விசாரணை; கைதான 4 பேரும் சிறையில் அடைப்பு

லஞ்ச வழக்குத் தொடர்பாக சென்னை ஏ.ஜி. (அக்கெüண்டன்ட் ஜெனரல்) அலுவலக பொது கணக்காயரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
லஞ்ச வழக்கு: பொது கணக்காயரிடம் 15 மணி நேரம் சிபிஐ விசாரணை; கைதான 4 பேரும் சிறையில் அடைப்பு

லஞ்ச வழக்குத் தொடர்பாக சென்னை ஏ.ஜி. (அக்கெüண்டன்ட் ஜெனரல்) அலுவலக பொது கணக்காயரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ஏ.ஜி. (அக்கௌண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் பொதுக்கணக்காயராக அருண் கோயல் (51) கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார்.
 இவர், தமிழக அரசின் பொதுப்பணித் துறை தொகுப்பு நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டார அளவில் 80 அதிகாரிகளை நியமித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நியமனங்களுக்காக ஒவ்வொரு அதிகாரிடமிருந்து அருண்கோயல் லஞ்சம் பெற்று வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் இது தொடர்பாக ஏ.ஜி. அலுவலக ஊழியர்கள், அருண்கோயல் லஞ்சம் வாங்குவது குறித்து சிபிஐயில் புகார் தெரிவித்தனர்.
 இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், அருண்கோயலை தங்களது கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர் எஸ்.சிவலிங்கம், தன்னை விழுப்புரம் கோட்ட பொதுப்பணித்துறை தொகுப்பு நிதி கணக்காயராக நியமிக்கக் கோரி, அருண்கோயலிடம் முறையிட்டதாக தெரிகிறது. அதற்கு அருண்கோயல் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.
 இந்த பணத்தை சிவலிங்கம், அருண்கோயலிடம் வெள்ளிக்கிழமை வழங்குவதற்காக அவரது அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது அருண்கோயல் சார்பாக ஏ.ஜி.அலுவலக நிதிநிலைப் பிரிவு மூத்த அலுவலர் கஜேந்திரன் அந்த பணத்தை சிவலிங்கத்திடம் பெற்று, அருண்கோயலிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அருண்கோயலையும், கஜேந்திரனையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
 அதேபோல லஞ்சம் கொடுத்த சிவலிங்கம், அவருக்கு உதவியாக இருந்த திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் எல்.எஸ்.ராஜா ஆகியோரையும் கைது செய்தனர்.
 15 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் அருண்கோயல் வீடு உள்பட கைது செய்யப்பட்ட நால்வரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து, சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் ஏ.ஜி. அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 இந்த விசாரணையில் அருண்கோயல், யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கியுள்ளார் என்ற தகவல்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டியதாக தெரிகிறது. சனிக்கிழமை காலை 7.15 மணியளவில் விசாரணை முடிந்த பின்னர் சிபிஐ அதிகாரிகள், ஏ.ஜி. அலுவலகத்தில் இருந்து 4 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
 அங்கு சிறிது நேர விசாரணைக்கு பின்னர், 4 பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவையடுத்து 4 பேரும், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com