நீட் தேர்வு: வெளி மாநிலம் செல்வோருக்கு பயணப்படி-உதவித் தொகை

நீட் தேர்வு: வெளி மாநிலம் செல்வோருக்கு பயணப்படி-உதவித் தொகை

நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவ, மாணவியருக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் இதர செலவுக்காக ரூ.1000மும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் மாணவ, மாணவியருக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் இதர செலவுக்காக ரூ.1000மும் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகப் பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியருக்கும் அவர்களுடன் செல்லும் நபருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் அளிக்கப்படும். பேருந்தில் பயணம் செல்வதாக இருந்தால், இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவியரின் இதர செலவினங்களுக்காகத் தலா ரூ.1000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
எப்படிப் பெறுவது?: இந்த உதவித் தொகைகளை கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும் பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து தொகையை பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பியதும், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி எண்: நீட் போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகை வழங்கப்படும். இதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லாத தகவல் மற்றும் ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிரச்னை என்ன? தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் சிலருக்கு கேரளம், ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில் தேர்வுக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை சி.பி.எஸ்.இ. ஒதுக்கியுள்ளது. இது நீட் தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகும் மாணவர்களிடையேயும் அவர்களின் பெற்றோரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, வெளி மாநிலங்களில் தேர்வுக் கூடங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்கு பயணப் படியையும், உதவித் தொகையையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com