பி.இ. கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தலாம்: நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை. ஒப்புதல்

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பி.இ. கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தலாம்: நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை. ஒப்புதல்

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், வழக்குரைஞர் பொன்.பாண்டியன் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியிருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனு தொடர்பாக பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்பதில் எந்தப் பாதிப்பும் இல்லை. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத் தொகையை வரைவோலையாகச் செலுத்த அனுமதிக்கலாமா என்பது குறித்தும் தமிழில் விண்ணப்பிக்க அனுமதி அளிப்பது தொடர்பாகவும் பரிசீலித்து இறுதி முடிவைத் தெரிவிக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில் அதிருப்தியடைந்த உயர்நீதிமன்றம், மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ஏன் ரொக்கமாகப் பெறக்கூடாது என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்திவைத்திருந்தது.
மீண்டும் விசாரணை: இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போதுஅண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் சி.மணிசங்கர் ஆஜராகி, தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க 2 ஆயிரத்து 580 கணினிகள் வைக்கப்பட்டு, தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து நன்கு தெரிந்த அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 முதல் தற்போது வரை விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தும் முறை அமலில் உள்ளது. இந்தாண்டு இதுவரை 45,000 பேர் எவ்வித இடையூறுமின்றி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். எனவே கட்டணத்தை வரைவோலையாகப் பெற முடியாது என்றார்.
நீதிபதிகள் அறிவுறுத்தல்: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மீண்டும், மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் ஒரே பதிலைச் சொல்லி வருகிறது. இணையதள வசதி மற்றும் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், கடன் அட்டை, பற்று அட்டை இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? ஆன்லைன் முறையால் எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்ற நிலை ஒரு மாணவருக்குக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது. 
இதை மனதில் வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்களிடம் வரைவோலையாகப் பெற்றுக்கொண்டு அதை அண்ணா பல்கலைக்கழகம் தனது நடப்புக் கணக்கு மூலமாக இணைய வழி வங்கிச் சேவை மூலமாக பரிமாற்றம் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மே 18-ஆம் தேதிக்குள்...பின்னர் அரைமணி நேர கால அவகாசத்துக்குப் பின் மீண்டும் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் சி.மணிசங்கர், விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக் கொள்கிறோம்.
ஆனால் இதற்கு ஏற்ற வகையில் மென்பொருளை மாற்றியமைக்க வேண்டும்.அதற்கு ஒரு வார கால அவகாசம் தேவை. வரும் மே 18 ஆம் தேதிக்குள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவதாகத் தெரிவித்தார். 
இதனையடுத்து நீதிபதிகள் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தனது இறுதியான நிலைப்பாட்டினை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com