சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் சாலை மறியல்: 400 பேர் கைது

சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு, தேசிய பண்டிகைக்கால விடுப்புச் சம்பளம் ரூ.300 வழங்கக் கோரி, கடந்த ஏப்ரல் 30முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, ஆர்ப்பாட்டம், பேரணி போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
கூலி உயர்வு தொடர்பாக கடந்த 10ஆம் தேதி சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14ஆம் தேதி திருநெல்வேலியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவை தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் வட்டார விசைத்தறித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்கரன்கோவிலில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
முன்னதாக, விசைத்தறித் தொழிலாளர்கள் லெட்சுமியாபுரம் 4ஆம் தெருவிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். சிஐடியூ மாநிலத் துணைப் பொதுச்செயலர் கருமலையான் தலைமை வகித்தார். நிர்வாகிகள், தொழிலாளர்கள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
பேரணி திருவள்ளுவர் சாலை, திருவேங்கடம் சாலை வழியாக பிரதான சாலைக்கு வந்தபோது அவர்களை போலீஸார் தடுத்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருநெல்வேலி, ராஜபாளையம், கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 60 பெண் தொழிலாளர்கள் உள்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com