நிபா வைரஸ்: தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

நிபா வைரஸ் தாக்கத்தினால் கேரள மாநிலத்தில் 15 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, தமிழக -கேரள எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸ்: தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

நிபா வைரஸ் தாக்கத்தினால் கேரள மாநிலத்தில் 15 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, தமிழக -கேரள எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 15 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. தமிழகத்திலும் நிபா வைரஸ் தொடர்பான பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து கண்காணிப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: 

தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அனைத்துத் துறையினருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சல், சாதாரண காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பன்றி வளர்ப்போர், பண்ணைகள் ஆகியவற்றில் உள்ள பன்றிகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். பழந்தின்னி வெளவால்கள் மூலம் இது பரவும் என்பதாலும், வனப்பகுதிகளில் பழங்கள் காய்க்கும் மரங்கள் உள்ளிட்டப் பகுதிகளை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிபா வைரஸ் தொடர்பாக முதல்வர் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் டாக்டர் குழந்தைசாமி.

பீதி வேண்டாம்: தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எந்த புகாரும் வரவில்லை. எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: 

மலைப்பாங்கான பன்றிப் பண்ணைகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவ வாய்ப்பில்லை. கேரளத்தில் நோய் பாதித்த வெளவால்கள் அதிக தூரம் பறந்து வர வாய்ப்பில்லை. எனினும், கேரள எல்லையில் இருக்கக்கூடிய நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் நிலைமையை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.

குறிப்பிட்ட எந்த பகுதியிலாவது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். இதுவரை அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் ஏற்பட்டால் அது எம்மாதிரியான காய்ச்சல் என்பதை அரசு மருத்துவமனைக்குச் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். கேரள சுகாதாரத் துறையுடனும் தொடர்பில் உள்ளோம் என்றார் அவர்.

பாதுகாத்துக் கொள்வது எப்படி? நோய்வாய்ப்பட்ட பன்றிகள் இருக்கும் பகுதிகளில் புழங்கக் கூடாது. காய்கறிகள், பழங்களை நன்கு தண்ணீரில் கழுவிய பின்புதான் உட்கொள்ள வேண்டும். வெளவால் உள்ளிட்ட பறவைகள் கொத்திய பழங்களைச் சாப்பிடக் கூடாது. காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சுய மருத்துவம் கூடாது என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

நிபா வைரஸ்: 1998 -99 -ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பழந்தின்னி வெளவால்களின் சிறுநீரகம், உமிழ்நீர், முகம் ஆகிய இடங்களில் இந்த வைரஸ் உற்பத்தியாகிறது. இந்த வெளவால்கள் கடித்த பழங்களை பிற விலங்குகள் உண்ணும்போதும், அவற்றின் சிறுநீர், உமிழ்நீர் விலங்குகளின் மீது படுவதன் மூலமும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் மனிதர்கள் பழகும்போது அவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 

அறிகுறிகள் என்ன?: இந்த நோய்க்கான வைரஸ் 5 முதல் 14 நாள்கள் உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி, சோர்வு, தன்னிலையிழத்தல், மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். நோய் தீவிரமடையும்போது நோயாளிகள் சுயநினைவை இழப்பர். அதைத்தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு உயிரிழப்பர்.

சிகிச்சை முறைகள்: நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர், வியர்வை உள்ளிட்டவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதன் மூலம் பாதிப்பைக் கண்டறிய முடியும். மாதிரிகளை புணே, மணிபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்க முடியும். 

டெங்கு காய்ச்சலைப் போன்றே இந்த வைரஸ் பாதிப்புக்கும் பிரத்யேக சிகிச்சை முறைகள் கிடையாது. இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்துகள், தடுப்பூசியும் கிடையாது. எனினும் அறிகுறிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு சிகிச்சைகள் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளத்தில்...

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் அம்மாநில அமைச்சர்கள் சைலஜா, டி.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் சைலஜா கூறியதாவது: நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணக்கெடுத்து, அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைபடுத்தி வைத்துள்ளோம். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com