விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்

விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தொழில் கூட்டமைப்பினர் (சிஐஐ) கேட்டுக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ். உடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கிரி
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ். உடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கிரி

விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தொழில் கூட்டமைப்பினர் (சிஐஐ) கேட்டுக் கொண்டனர்.
மேலும், மதுரை-தூத்துக்குடி இடையிலான தொழில் வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ், தென் மண்டல இயக்குநர் சதீஷ் ராமன், தமிழகத் தலைவர் எம்.பொன்னுசாமி, துணைத் தலைவர் எஸ்.சந்திரமோகன் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். பின்னர் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வணிக நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழக அரசு சார்பாக தனி இணையதளம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்தோம். மேலும், அதனை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் ஒரு இணையதளம் தயார் செய்துள்ளனர். அதுவும் நல்ல முறையில் உள்ளது.
அதே போன்று, பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் வளத்துக்கென தனி அறிக்கைகள் அரசால் தயார் செய்யப்பட்டுள்ளன. அதற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு எந்தவிதத்தில் உதவிகளைச் செய்ய முடியும் என்பதைச் சொல்லியிருக்கிறோம். வணிக நடைமுறைகளை எளிதாக்கும் இணையதளத்தை ஏறக்குறைய 29 நிறுவனங்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வருகின்றன என்றனர். 
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்:- 
""சென்ற முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில்கூட தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பு பங்கு வகித்தது. அடுத்து நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் அதனை நிச்சயம் தொடர்வோம். 
ரூ.10 கோடி முதலீட்டுக்குக் குறைவாக உள்ள சிறு தொழில்முனைவோர் ஒற்றைச் சாளர முறை மூலம் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது. 
இந்தத் தகவல் மக்களைச் சென்றடைய வேண்டும். இதில், விண்ணப்பிக்கும்போது, பல துறைகளுக்கு ஒப்புதலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு இடத்தில் கொடுத்தால் அனைத்து ஒப்புதல்களும் பெற்று வந்து விடும். அதனை சிறு தொழில் முனைவோர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 
உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: உற்பத்தி கூடினால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். நாங்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை, வாய்ப்புகள் வருவதற்கு ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். அதேபோல் புதிய தொழில்கள் உருவாக வேண்டும். 
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் மட்டுமல்லாமல், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் என தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்திய தொழில் கூட்டமைப்பில்கூட, கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக நகரத்துக்கு வருவதற்குப் பதிலாக, கிராமங்களிலே வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு வடிவத்தை கொடுக்கிறோம்.
மதுரை-தூத்துக்குடி தொழில் வழிச் சாலை குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். 
நாங்கள் இந்தத் தொழில் வழிச் சாலை திட்டத்துக்காக அரசுடன் இணைந்து செயலாற்றுவோம். இதில் உடனடியாக வெற்றி கிடைக்கும் என்று கூற முடியாது. விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
போக்குவரத்து இணைப்பு வசதிகள்: தொழில் வழித் தடம், சாலைகள், விமானப் போக்குவரத்து ஆகியன குறித்து, அரசால் செய்யப்பட்டுள்ள வாக்குறுதிகளில் தொடர் செயல்பாடுகள் இருந்தால் நிச்சயம் திருப்திகரமாக இருக்கும்.
விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் சரியான நேரத்தில் நடைபெற வேண்டுமென்பதே தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு. 
அதற்கு இன்றைக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட இரவு நேரங்களில் விமானத்தை இயக்கும் வசதியை ஏற்படுத்த நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com