உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன்! ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தப்பித்த ஒரு பத்திரிகையாளரின் பதிவு!

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான கிராம மக்களும், சமூக ஆர்வலரும் கடந்த 100 தினங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன்! ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தப்பித்த ஒரு பத்திரிகையாளரின் பதிவு!

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான கிராம மக்களும், சமூக ஆர்வலரும் கடந்த 100 தினங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

100-வது நாள் போராட்டத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டனர். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிய கிராம மக்களை காவல் துறையினர் ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி, நவீன ரக துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கிளை பயன்படுத்தி சுடத் தொடங்கினர். அப்போது அந்தச் சம்பவ இடத்தில் பணியிலிருந்த பத்திரிகையாளரான காட்சன் வைஸ்லி தாஸ் (Godson Wisely Dass S) என்பவர் ஒரு நொடியும் அங்கிருக்க முடியாத நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஒருத்தனாவது சாகணும் என்ற ஒரு காவலரின் குரலைக் கேட்டவர் அங்கிருந்து பதறி ஓடத் தொடங்கினாராம். 

தனது ட்விட்டரில் காட்வின் இச்சம்பவத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ‘மே 22 ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், ரேஸில் ஓடியது போலவே ஓடி தப்பித்தேன். மறக்க முடியாத தினமாக அது மாறிவிட்டது. அன்று துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் வரை ஓடினேன். அப்போது என் இதயத்துடிப்பை என்னாலேயே கேட்க முடிந்தது. மனம் தளராதே, இன்னும் சிறிது தூரம் ஓடினால் உயிர் தப்பிவிடலாம் என்று தெரிந்தது. எனக்கு மிக மிக அருகில் இன்னும் குண்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. என்னுடன் சேர்ந்து பலர் உயிர் தப்ப ஓடினார்கள்.’என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.

கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கி, தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடிய மக்கள் மீது இப்படியொரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது தமிழக மக்களை கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. காட்டுமிராண்டித்தனமான இப்படிப்பட்ட சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்ற காவல் துறையினரின் செய்கை கடும் கண்டனத்துக்குரியது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கொந்தளித்துள்ளனர்.

போராட்டம் தீவிரமாக பலநிலையிலும் தொடர, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பதற்றம் நிலவுகிறது. ஆங்காங்கே பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com