முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை: துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர் வாக்குமூலம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிராம மக்களில் 11 பேர் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணித்தனர்.
முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை: துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர் வாக்குமூலம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிராம மக்களில் 11 பேர் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணித்தனர்.

உயிர் இல்லாத உடல்களை எடுத்துச் செல்ல எந்த ஆம்புலன்ஸும் இல்லை. அனைத்து உடல்களும் இரு சக்கர வாகனங்களில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே இருந்த நல்லதம்பி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஒருவராவது உயிர் பிழைக்கப்படலாம் என்ற நம்பிக்கையோடு என்கிறார் ஜெய் கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

மேலும் அவர் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென காவல்துறையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள். ஒரு உடல் எனது அருகில் நின்றிருந்த சகோதரரின் தோள் மீது வந்து விழுந்தது என்கிறார் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.

காலை 9.30 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம் நடத்தாத வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்தனர். பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. சார்மினா பந்தல்களும் போடப்பட்டன. ஆனால், திடீரென மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்லத் தொடங்கினர்.

பல்வேறு குழுக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன. முதலில் விவிடி சிக்னல் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். சில பெண்களை காவல்துறையினர் அடித்தனர். இதைப் பார்த்த கிராம மக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. காவல்துறை மீது கல்வீசித் தாக்கினர். அப்போது காவல்துறையினர் குறைவாக இருந்ததால் அவர்கள் சென்றுவிட்டனர். 

அடுத்து நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டோம். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். அப்போதும் காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது அங்கே 50 முதல் 60 காவல்துறையினர் மட்டுமே இருந்தனர். அவர்கள் எங்கள் மீது தடியடி நடத்தினர். அப்போதும் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

அவர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சு மற்றும் தலையை குறி வைத்து சுட்டனர். சுடப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிலர் உடனடியாக நல்லதம்பி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலரை கொண்டு செல்லும் போதே எந்த அசைவும் இல்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

ஆனால், துப்பாக்கிச் சூட்டினால் கிராம மக்கள் கலைந்து செல்லவில்லை. இது, கிராம மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கற் வீச்சு சம்பவம், வாகனங்களுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்பகுதி போர்க்களமாக மாறியது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com