இந்த ஆண்டு ரூ. 8,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் செல்லூர் கே.ராஜு

இந்த ஆண்டு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். 
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு.

இந்த ஆண்டு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் சரக துணைப் பதிவாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாதவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். 
இதில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கூட்டுறவுத் துறையின் கீழ், செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பணிகள் மேற்கொள்ள 2011-12 முதல் 15.05.2018 வரை 69, 43, 673 விவசாயிகளுக்கு ரூ.33,814.32 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2018-19) ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மேலும் தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் தடையின்றி பயிர்க்கடன் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3265.39 கோடி அனுமதிக்கப்பட்டு 15.05.2018 வரை ரூ. 2,875.84 கோடி விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் நிதிமாற்றம் செய்ய தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் வணிக வங்கிகளுக்கு இணையாக இ-பேங்கிங் - சிபிஎஸ்-ஆர்டிஜிஎஸ்- என்இஎப்டி- மொபைல் பேங்கிங்- எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் 32,827 நியாய விலைக் கடைகள் மூலம் 1,79,78,859 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் பண்டக சாலைகளில் கூட்டு கொள்முதல் குழு மூலம் கொள்முதல் செய்யப்படும். 
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் வழங்கப்பட வேண்டும். தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் அரசின் சிறப்பான திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி, பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கு.கோவிந்தராஜ், ராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், டாக்டர் நா.வில்வசேகரன், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com