குறுவை சாகுபடியைக் காக்க காவிரி ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்

குறுவை சாகுபடியைக் காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைத்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்.

குறுவை சாகுபடியைக் காக்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைத்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக தன்னெழுச்சியாகப் போராடிய பொதுமக்களுக்கும், திமுகவின் தோழமைக் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி.
அதிகாரமில்லா ஆணையம்: தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. ஆனால், மூன்று மாத காலம் அவசாகம் பெற்று, இறுதியில் அதிகாரமில்லாத ஓர் அமைப்பை உருவாக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்திடம் வழங்கியது. அதனை உச்ச நீதிமன்றமும் இறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவில் 14.75 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்ததை எதிர்த்து தமிழக அரசு வாதிடவில்லை. அணைகளைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்தும் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமலும் அதிமுக அரசு கோட்டை விட்டுள்ளது. அப்படிப்பட்ட வாரியத்தை அமைக்கவே முடியாது என்று வழக்கு விசாரணையின் இறுதி நாளில் கூடப் பிடிவாதமாக மறுத்து தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். 
குறுவை சாகுபடிக்கு நீர்: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க ஜூன் 1-ஆம் தேதி வரை காத்திருக்காமல் உடனே அமைத்து, அதை அரசிதழில் வெளியிட வேண்டும். குறுவை சாகுபடிக்கு காவிரி நீரைத் திறந்து விட மத்திய அரசு அவசரக் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறப்பது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு உரிய நீரை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com